Home சினிமா மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தங்களை ஆள்கிற தலைவனைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் எந்தளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதை ஜாலியாகவும் கேலியாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிற படம்.

தமிழ்க் குடிமகன் வாலிபப் பருவத்தைக் கடந்தவர். தான் வசிக்கும் கிராமத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலனுகெதிரான நடவடிக்கைகளை எதிர்த்து, மக்களைத் திரட்டி போராடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமூக அக்கறையில் அல்ல; அதை வைத்து ஆளுங்கட்சி தரப்பிலிருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கம் நல்லபடியாக நிறைவேறுகிறது.

அவரது புத்திசாலித்தனத்தையும் அவரை நம்பி பின்னால் திரள்கிற கூட்டத்தையும் கவனிக்கும் ஒரு மல்ட்டி மில்லியனர், அவரை தலைவராக்கி தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்.

நினைத்தது நடந்ததா இல்லையா என்பது ராம் தேவ் இயக்கியிருக்கும் ‘மக்கள் தலைவா’வின் மீதிக் கதை…

தமிழ்க் குடிமகனாக ரவி மரியா. ‘நக்கல் நாயகன்’ என்ற அடைமொழியோடு கதாநாயகனாகியிருக்கிறார். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம், தன் போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்கலாம் என்பதை அலசி ஆராய்ந்து ஆளுங்கட்சியின் நிம்மதிக்கு ஆப்பு வைப்பதாகட்டும், அரசியல்வாதியாக மாறி மேடைகளில் ‘முடியாததை சொல்வோம் முடிந்ததை செய்வோம்’ என்ற தங்கள் கட்சியின் கொள்கையை அறிவித்து வாக்குறுதிகளை அன்லிமிட்டாக அவிழ்த்து விடுவதாகட்டும் தனக்கு முன் இணைந்துள்ள அடைமொழிக்கு நியாயம் செய்துள்ளார்.

மக்களின் முட்டாள்தனத்தை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை நிரூபிப்பவராக ராதாரவி. நினைத்ததை சாதிக்க எந்த லெவலுக்கும் இறங்கும் கார்ப்பரேட் அதிபராக அனுபவ நடிப்பால் கெத்து காட்டுகிறார். அவர் ஏன் ஆட்சியைப் பிடிக்க முடிவெடுத்தார் என்பதற்கான காரணம் தெரியும்போது ‘அடடே’ என்றிருக்கிறது.

முதலமைச்சராக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) கவிதாலயா சரவணன், அமைச்சராக பழ கருப்பையா, அரசியலை கரைத்துக் குடித்தவராக நாஞ்சில் சம்பத், சின்னச் சின்ன காமெடி பங்களிப்புக்காக கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன் என சீனியர்களின் அணிவகுப்பு அதிகம்.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் அபகரிக்கும் விவகாரம் கதையின் முக்கியப் பகுதியாகி அரசை அசைத்துப் பார்க்கிறது. அசைப்பதற்கு அஸ்திவாரமாக இருக்கிறார் இயக்குநர் பேரரசு.

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் வேண்டும் என்பதற்காக அக்சரா விஜய்யை இழுத்துப் போட்டிருக்கிறார்கள். அவர் தன் பங்கிற்கு ஒரு பாடலில் ஏற்ற இறக்கமாய் ஆடி இளமை விருந்து வைக்கிறார்.

துளசி ராமன் இசையில், ரம்யா சி பாடும் ‘கேளு மக்கா மக்கா’ பாடலும், ‘சிலாக்கி சுந்தரி’ குத்தாட்டப் பாடலும் உற்சாகத்துக்கு கேரண்டி. பைஜூவின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு போதுமானதாக இருக்க,

தேனி, பெரியகுளம் என பசுமைக்கு பஞ்சமில்லாத இயற்கை வளங்களை கார்த்திக் எஸ் நாயரின் கேமரா மூலம் கழுகுப் பார்வையில் பார்ப்பது மனதுக்கு இதம் தருகிறது.

தமிழகத்தில் கர்மவீரர் காமராஜர் காலத்திலிருந்து கறுப்பு கோட் விஜய் காலம் வரை நடந்தது, நடந்து கொண்டிருப்பது என எல்லாவற்றையும், வேகமாக அடிக்கும் காற்று புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவது போல் ஒரு பார்க்கும் வாய்ப்பைத் தருகிற திரைக்கதையும் அதில் கலந்திருக்கும் காமெடியும் ரசிகர்களின் மெஜாரிட்டியை அதிகரிக்கிறது!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்