Home பொது மண்டாடி சினிமா விமர்சனம்

மண்டாடி சினிமா விமர்சனம்

படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டலாம். அப்படியொரு உழைப்பில் கரை சேர்ந்திருக்கிற ‘மண்டாடி.’

கடல் எவ்ளோ பெருசோ அதிலிருக்கிற ஆபத்தும் அத்தனை பெருசு.

டிரெய்லரில் வருகிற இந்த வசனமே கதைக்களம் பற்றி சொல்லிவிடுகிறது. படம் பாய்மரப் படகுப் பந்தயம் என்கிற குறிப்பிட்ட சாகச விளையாட்டில் இருக்கிற ஆபத்தை, போட்டி பொறாமையை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது.

அதே டிரெய்லரின் இடம்பெறுகிற ‘சிங்கங்கள் இல்லாத காட்டை ஓநாய்கள் அரசாள்ற கதையா நீ போன 20 வருஷத்துல பாய்மரப் பந்தயம் சாட்டாபுலி கட்டுக்குள்ள போய்டுச்சுயா’ என்ற இன்னொரு வசனம் கதைநாயகனைப் பற்றி சொல்லிவிடுகிறது.

அப்படியொரு சிங்கமாய் மாஸான கேரக்டருக்கேற்ற உடற்கட்டு, படகுப் பந்தயக் குழுவின் தலைவராக துணிச்சலான செயல்பாடு, சுற்றி வளைக்கும் சூழ்ச்சிக்காரர்களை எதிர்கொள்வதில் காட்டும் ஆக்ரோஷம், தன்னைப் போலவே இளைஞர்களை பலரை மண்டாடியாக உருவாக்க அளிக்கிற பயிற்சி, மற்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நேர்த்தி என நடிப்பில் நான்கைந்து படங்களில் போட வேண்டிய உழைப்பை ஈடுபாட்டுடன் ஒரே படத்தில் போட்டது போலிருக்கிறது முத்துக்காளியாக வருகிற சூரியின் பங்களிப்பு.

தெலுங்கு நடிகர் சுஹாஸுக்கு சூரியை வீழ்த்த நினைக்கும் வீரியமான வில்லனாக களமாடுகிற வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தி மிரட்டியிருக்கிறார்.

கடலோர கிராமத்துப் பெண்ணாக தோற்ற மாற்றம் கச்சிதமாக பொருந்த, அழுத்தமான கேரக்டரில் கவனம் பெறுகிற மஹிமா நம்பியாருக்கு அவரது கரியரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படம்.

படகுப் போட்டியின் பிதாமகனாக, தன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்வழி காட்டுபவராக சத்யராஜ். அசத்தலான கெட்டப்பில் இயற்கையின் விதிகள் பற்றி, கடலின் சீற்றம் பற்றி, மீனவர்களின் வாழ்வியல் பற்றி எடுத்துச் சொல்லி ஆளுமை மிக்க நபராக தனித்து தெரிகிறார். அவர் அடித்து ஆட் ஆக்சன் காட்சிகளும் உண்டு.

மகனின் எதிர்காலம், குடும்பத்தின் கௌரவத்திற்காகப் போராடுபவராக ரவீந்திர விஜய், சூரியின் நண்பனாக பாலசரவணன் என இன்னபிறர் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்க,

கிட்டத்தட்ட எல்லா காட்சிகளுமே அதிரடி ஆர்ப்பாட்டங்களுடன் நகர அவற்றுக்கு விறுவிறுப்பையும் சுறுசுறுப்பையும் கலந்து தந்திருக்கிறது ஜி வி பிரகாஷின் பின்னணி இசை. ‘மண்டாடி மண்டாடி’ பாடல் தியேட்டரில் ஒருவித அதிர்வலை பரப்ப, மற்ற பாடல்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் கடந்தோடுகின்றன.

பிரமாண்ட கடல், வெறித்தனமான படகுப் போட்டி, கடலோர கிராமத்துப் பின்னணி என கதைக்கும் களத்துக்கும் ஏற்ற கோணங்களில், ஒளியுணர்வில் எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலம்.

காட்சிகளின் கோர்வையில் தீப்பிடித்த பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.பிரதீப் ராகவ்வின் எடிட்டிங் அத்தனை ஷார்ப்.

பாய்மரப் படகுப் பந்தயம் ஊரின் கெளரவம்; அதில் இணைந்து விளையாடிய இரண்டு பேர், இரு தரப்பாக பிரிந்து எதிரிகளாக மாறுவதும், எதிரிகள் போட்டியில் களமிறங்குவதும் தடக்கும் கதையில் ஜெயிப்பது திறமையா சூழ்ச்சியா?’ என படபடப்புடன் எதிர்பார்க்கும்படி திரைக்கதையை முறுக்கேற்றியிருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கடைசி 20 நிமிடங்கள் 100% கூஸ்பம்ஸ் மொமன்ட்.

இதுவரை பார்க்காத கதைக்களம், அனல் பறக்கும் சம்பவங்கள், சூரியின் அசுரத்தனமான நடிப்பு, பெரியளவிலான பொருட்செலவு எல்லாமும் கலந்துகட்ட மண்டாடி ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக்கியிருக்கிறது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்