காலங்காலமாய் காதலர்களைத் துரத்துகிற பிரச்சனைகளும் அதை சமாளிக்கும் போராட்டங்களுமாய் மெனி டைம்ஸ் பார்த்துப் பழகிய கதையம்சத்தில் ‘மெனு.’
எளிய குடும்பத்து இளைஞனும் 150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிற குடும்பத்து வாரிசும் காதலிக்கிறார்கள். அந்த வாரிசின் அப்பா பவர்ஃபுல்லானவர்; சாதிப் பாகுபாடு, அந்தஸ்து என எல்லாமும் பார்ப்பவர்.
கதை இப்படி தொடங்க, காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற, அப்பா வெறியேற என வழக்கமான ரூட்டிலேயே பயணிக்கிறது திரைக்கதை…
ஆணவக் கொலைகளில் ஈடுபட்டவர்களை குற்றவுணர்ச்சி எந்தளவுக்கு வாட்டி வதைக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருப்பது கதையோட்டத்தின் கனமான அத்தியாயம்.
ஹீரோவை நடிகர் விஜய் பெயரில் மன்றம் நடத்தி ஊருக்கு நல்லது செய்கிறவராக காட்டியிருப்பதை பாராட்ட வேண்டும். ஹீரோவாக வருகிற ஸ்ரீயூத்துக்கு காதல் உணர்வை, கோபத்தை, இயலாமையை என உணர்வுகளை வெளிப்படுத்தவும், நடனமாடவும், ஆக்சன் காட்சியில் சீறிப் பாயவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாவற்றையும் பரவாயில்லை என்கிற அளவில் செய்திருக்கிறார்.
ஹீரோவை சிரித்த முகத்துடன் காதலிக்க வேண்டும்; அவரோடு வீட்டை விட்டு ஓடிப்போய் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டு பசி பட்டினியோடு அவஸ்தைப்பட வேண்டும். கொடுத்திருக்கும் டெம்ப்ளேட் வேலையை சிம்பிளாக செய்திருக்கிறார் ரேஷ்மா லிங்கராஜப்பா.
ரேஷ்மாவுக்கு அப்பாவாக வருபவர் மகள் தன் காதலனுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து ஆக்ரோஷமாவது, அழைத்து வந்து வீட்டில் அடைத்து வைப்பது, தங்கள் குடும்ப கெளரவத்துக்கேற்ற மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இறங்குவது, வீட்டை விட்டு ஓடிப்போன மகளைக் கொன்று தீர்த்து தலையை கொண்டுவரச் சொல்லி அடியாட்களை களமிறக்குவது என உருட்டலும் மிரட்டலுமாக வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் பண்ணையார் தரப்பில் அடிபட்டு மிதிபட்டு பரிதாபப்பட வைக்கும் ஐயப்பன் ஜெய், காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கவனித்துக் கொள்ளும்போது கேரக்டரின் மதிப்பை உயர்த்துகிறார். ஒரு காட்சியில் சிரிப்பூட்டவும் செய்கிறார். விஜய் செல்வம், தேவிஸ்ரீ என மற்றவர்கள் பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.
‘என் மனதில் என் உயிரில்’, ‘கொஞ்சம் இடம்கொடு மனமே’, ‘பலித்ததே கனவு கிடைத்ததே உறவு’ என அணிவகுக்கும் பாடல்களை காதலின் உற்சாக கொண்டாட்டமாய் தந்திருக்கும் ஹர்ஷா ‘காணலையோ காணலையோ’ என காதல் தோல்விப் பாடலை சோக கீதமாய் இசைத்திருக்கிறார். பின்னணி இசை தேவையை சரியாக நிறைவு செய்துள்ளது.
கண்ணுக்கெட்டிய தூரம் தேநீர்ச் செடிகளின் கூட்டம், பரந்து விரிந்த பள்ளத்தாக்கு என கதை நிகழ்விடத்தின் பசுமையை, மெட்ரோ ரயில் பணிகளில் சிக்கியிருக்கும் சென்னையின் போக்குவரத்து நெருக்கடியை அங்குலம் அங்குலமாக பதிவு செய்திருக்கிறது சதாசிவ ஜெயராமனின் கேமரா.
‘ஆணவக் கொலைகளுக்கு முடிவேயில்லை’ என்கிற உண்மையைப் பிரதிபலிக்கும் கதையை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் துர்கா பிரசாத், காட்டியிருக்கும் கொலை சம்பவம் வித்தியாசமாக அரங்கேறி அதிர வைக்கிறது. கில்லி படத்தில் விஜய் பிரகாஷ்ராஜிடமிருந்து த்ரிஷாவை சாமர்த்தியமாக பிரித்துக் கூட்டிச் செல்லும் காட்சியை ரீ கிரியேட் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது. ஹேப்பி என்டிங் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
-சு.கணேஷ்குமார்

