இசையால் புகழ்பெற விரும்புகிற ஒருவனை காலச்சூழல் இம்சைக்குள் தள்ளுகிற கதை.
பள்ளியொன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் குடும்பஸ்தர் ராஜனுக்கு பாடும் திறமையிருக்கிறது. தொலைக்காட்சியொன்றின் ரியாலிடி ஷோவில் பாடும் வாய்ப்பு கிடைத்து பாடுகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அடிக்கடி லீவு எடுப்பதால் வேலை பறிபோகிற, ரியாலிடி ஷோவில் அடுத்தகட்ட முன்னேற்றம் சாத்தியமில்லை என்கிற சூழ்நிலை. அப்படியொரு பரிதாபமான நிலைக்கு தள்ளப்படும் ராஜனின் அடுத்தடுத்த நாட்கள் எப்படி நகர்கின்றன என்பது திரைக்கதை… பாடகராக புகழ் பெற்றாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம், தயாரிப்பு ‘வெப்பம் குளிர் மழை’ திரவ்
தன்னிடமிருக்கும் பாடும் திறமைக்கான அங்கீகாரத்தை எட்டிப் பிடிப்பதற்கான முயற்சி, அதில் ஒரு கட்டம் தாண்டி முன்னேற முடியாத மன உளைச்சல், வேலை பறிபோன நிலையில் போதையின் பாதையில் அடியெடுத்து வைப்பது, மனைவி மீது நேசம், இரு குழந்தைகள் மீது பாசம் என கிஷோர் தந்திருக்கும் எளிமையான நடிப்பில் அவரது கதாபாத்திரம் உயிர் பெற்றிருக்கிறது.
கிஷோரின் மனைவியாக சுபத்ரா ராபர்ட், எளிய குடும்பத்தின் இல்லத்தரசியாக, ஆசிரியர் பணியில் தொடர்பவராக கண்டிப்பு, கனிவு, அக்கறை, பொறுப்பு என எல்லாவற்றையும் அளவாக தன் நடிப்பில் பரிமாறியிருக்கிறார்.
கிஷோர் – சுபத்ரா தம்பதியின் வாரிசுகளாக ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா வர்ஷினி துடிப்பாக களமாடியிருக்க, இன்னபிற நடிகர் நடிகைகளிடமிருந்து கதைக்கேற்ற பங்களிப்பு கிடைத்திருக்கிறது.
இசையை மையப்படுத்திய இந்த படத்தில், சங்கர் ரங்கராஜன் இசையில் முதல் மொட்டு’, இது என்ன மாயம்’, சிக்கு சிக்கோ’, ‘லைஃபுக்கு ஒரு சாங்கு’ என சில பாடல்கள் ஒன்றிரண்டு முறை கேட்கும் ரகத்தில் அணிவகுக்கின்றன. சில தருணங்களில் எட்டிப் பார்க்கும் இளையராஜாவின் ஒன்றிரண்டு பாடல்கள் செவிகளுக்கு இதம் தருகின்றன.
தேவராஜ் புகழேந்தி ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்குள் குறையின்றி பயணித்திருப்பதை உணர முடிகிறது.
சாமானிய மனிதனிடமிருக்கும் திறமையும் அதை வெளியுலகுக்கு காட்டிவிட துடிக்கும் அவனது முயற்சிகளும் போராட்டங்களும் என்ற கனமான கதைக்கு எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
-சு.கணேஷ்குமார்


