‘முதல் நீ முடிவும் நீ‘ சினிமா விமர்சனம்
பள்ளிப் பருவ காதல், மோதலை கதைக்களமாக கொண்ட படங்களின் வரிசையில் ‘முதல் நீ முடிவும் நீ.’
1997 – 1999 காலகட்டம்… டென்த், பிளஸ் டூ என பள்ளிப் பருவத்தின் முக்கிய காலகட்டத்தில், படிப்பு ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் என ஜாலியாக பொழுதைக் கழிக்கிறது வினோத் – ரேகா ஜோடி. மோதல் இல்லாத காதல் ஏது? அவர்களுக்குள்ளும் மோதல் உருவாகிறது. காதலர்கள் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் பல வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் அவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்ன? இயக்கம் இசையமைப்பாளர் தர்புகா சிவா
வினோத்தாக கிஷன் தாஸ், ரேகாவாக மேத்தா ரகுநாத் இயல்பான, அமைதியான நடிப்பால் ஈர்க்கிறார்கள். அவர்களின் சின்னச் சின்ன முத்தப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் இதழோடு இதழ் கலப்பது சிலிர்ப்பு!
ஒரு பெண் மீது விருப்பம் வந்து அவள் பெயரை ஆசிட்டால் கையில் எழுதி ரணப்படுத்திக் கொள்வது, அவள் உதாசினப்படுத்தும்போது அடுத்தடுத்த பெண்ணுக்காக ஆசிட்டை கையிலெடுப்பது என கலகலப்பூட்டுகிறார் ஹரீஷ்.
சரண் குமார், ராகுல் கண்ணன், வருண் ராஜன், நரேன், ஹரிணி ரமேஷ் கிருஷ்ணன், கெளதம் ராஜ், அம்ரிதா, பூர்வா ரகுநாத் என மாணவ மாணவிகளாக, நண்பர்கள் குழுவாக வருகிற அத்தனை பேரின் நடிப்பும் இயல்பு!
கதை 97 காலகட்டத்தில் நடப்பதால் அந்த காலகட்டத்தை அப்படியே கொண்டு வருவதற்காக சிரத்தையுடன் உழைத்திருக்கிறது கலை இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழு.
மாணவர்கள் மது அருந்தி சிக்குவது, வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து பிட் பட கேசட் எடுத்து வந்து, நண்பர்களுடன் பார்ப்பது, டெக்கில் கேசட் சிக்கி வீட்டாரிடம் மாட்டுவது என அந்தக்கால தப்புத் தண்டாக்களின் அத்தனை சுவாரஸ்யங்களும் அழகாய் அணிவகுக்கின்றன. அந்தக் கால வகுப்பறைகளில் பவர் பாயின்ட் பிரசன்டேஷன் வசதி இருப்பதாக காட்டியிருப்பது பொருந்தவில்லை.
பள்ளிப் பருவ நாட்களைச் சுற்றிவரும் கதையோட்டம், ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்ப்பது போல் இடைவேளைக்குப் பின் டிராக் மாறிப் பயணிப்பது, புராணங்களில் வருகிற மன்மதன் பாத்திரம் கதையின் ஒரு அங்கமாக வருவது, அந்த பாத்திரத்தில் படத்தின் இயக்குநரே நடித்திருப்பது என கவனம் ஈர்க்கிற சங்கதிகளுக்குப் பஞ்சமில்லை!
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் பெரிதாய்க் கவராமல் கடந்து போகின்றன. இத்தனைக்கும் கதையின் நாயகன் இசைக்கலைஞன்.
ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசை காட்சிகளின் நகர்வுக்கு பலம்!
80 – 2000 காலகட்டத்தில் பள்ளிகளில் கல்லூரிகளில் படித்தவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்க்க நல்ல வாய்ப்பு. இன்றைய தலைமுறைக்கு சில காட்சிகள் கொட்டாவிக்கு கேட் திறக்கலாம்.
எது எப்படியோ… காதலுக்கு சம்பந்தப்பட்டோரின் வீட்டார் எதிர்ப்பு தெரிவிப்பது, வெட்டுக் குத்துச் சம்பவங்கள் அரங்கேறி ஆணவக் கொலையில் முடிவது என வழக்கமான ரத்தவெறியாட்டம் இல்லாமல் அழகான காதல் கதையை தந்திருப்பதற்காக இயக்குநர் தர்புகா சிவாவை பாராட்லாம்!
இந்த படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது!