Home விமர்சனம் மை டியர் டாலி சினிமா விமர்சனம்

மை டியர் டாலி சினிமா விமர்சனம்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கிற பட்சத்தில், அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதெல்லாம் தெரிந்த கதைதான். அவளை பிரிந்தாலும் அவளுடன் குடித்தனம் நடத்துவான் என்பது இந்த ஃபேண்டஸி சப்ஜெக்ட்’டில் பார்க்கிற சற்றே புதிய கதை.

கார்த்திக்- சுமித்ரா ஜோடி ‘நாம கல்யாணம் செய்துக்கலாம்; ஆனா, நமக்குள்ள எந்த ஃபீலிங்ஸுக்கும் இடம் கொடுக்கக் கூடாது; நமக்குள்ள செக்ஸ் அதுஇதுன்னு எந்த தொடர்பும் இருக்கக்கூடாது. கணவன் மனைவி போல ஒரு செட்டப்பா ஆறு மாசம் ஒரே வீட்ல இருந்துட்டு டைவர்ஸ் வாங்கி பிரிஞ்சிடணும்’ என ‘கோ லிவ்‘ என்ற பெயரில் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

கார்த்திக்கின் விரல்கூட தன் மீது பட்டுவிடக்கூடாது என்பதில் சுமித்ரா உறுதியாக இருக்கிறாள். கார்த்திக்கும் அவளுக்கேற்றபடியே நடந்துகொள்கிறான். ஆனாலும், ‘ஆறு மாத காலத்துக்குள் அவளுக்கு நிஜ கணவனாகி விட வேண்டும்; அவளுடன் தாம்பத்ய உறவு நடக்கவேண்டும்; அவள் தாய்மையடைய வேண்டும்’ என்ற விருப்பங்களும் எதிர்பார்ப்பும் அவனுக்குள் இருக்கிறது.

அந்த அவனது விருப்பம், கல்யாணமாகி மூன்றாவது மாதத்தில் அவளுக்கு தெரிகிறது. அதனால் பூகம்பம் வெடிக்கிறது. செட்டப் தம்பதி பிரிகிறார்கள்.

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதிக் கதையாக இருக்க ,

அவர்கள் ஆறு மாத காலம் சேர்ந்து வாழ தீர்மானித்ததற்கான காரணம், அவர்களின் பின்னணி, சேர்ந்து வாழ்கிறபோது சந்திக்கும் சவால்கள், நடக்கிற வில்லங்க விவகாரங்கள் என விரிகிற திரைக்கதை வெரி வெரி இன்ட்ரஸ்டிங்.

கார்த்திக்காக வி ஜெ பப்பு. இதைவிட ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பணிந்து நடக்க முடியாது என்கிற அளவுக்கு உருவாக்கப்பட்ட காட்சிகளுக்கு அப்பாவித்தன முகபாவங்களாலும் உடல் மொழியாலும் உயிர் கொடுத்திருக்கும் அவர், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிற பொம்மையிடம் (Doll) காட்டும் அன்பால் மனம் நெகிழச் செய்கிறார்.

சுமித்ராவாக அனுபமா. லேசாக தான்யா ரவிச்சந்திரனின் சாயலில் இருக்கிற அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பது உண்மையான காதல் எது, காமம் எது என புரியாத மனநிலையில் இருக்கிற கதாபாத்திரம்.

போலி வாழ்க்கைக்காக தாலி கட்டியவன் தன்னை அரைகுறை உடையில் பார்த்துவிட்ட நிலையில் கொதிப்படைந்து புயல் போல சீறுகிற அவர், அதே நபர் தன் மீது வைத்திருக்கும் காதலை அணுஅணுவாக அனுபவித்தபின் தென்றலின் குளிர்ச்சியைக் காட்ட வேண்டும். மனதிலிருக்கும் குழப்பங்களை பிரதிபலிக்க வேண்டும்; தான் வெறுத்து ஒதுக்கிய நபர் மீது பொஸசிவ்னஸ் உருவாவதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.

நடிப்பில் வெரைட்டி காட்டுவதற்கான வாய்ப்பு அதிகம். பாஸ்மார்க் கொடுக்கலாம் என்கிற அளவில் காட்டியிருக்கிறார்.

பிள்ளைகள் விஷயத்தில் எல்லா அம்மாக்களுக்கும் இருக்கிற அதே டெம்ப்ளேட் ஆசாபாசங்களோடு ஆஷா. மகன் திருமண வாழ்க்கையை நாடகமாக நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து பதற்றம்கூடி படபடப்பாகும்போது அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

ஹீரோவின் நண்பனாக கே பி ஒய் ராஜவேலு, அவரது மனைவியாக அனு, கதாநாயகிக்கு தோழியாக தாரா, கதாநாயகியின் முன்னாள் காதலராக டோம்னிக் என மிச்சமிருக்கிற சில கேரக்டர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கெஸ்ட் ரோலுக்கான பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

பாசில் இசையில் ‘காத்தாடி போல’ பாடல் இதம் பரப்ப, ‘எனைவிட்டு நீயும் போகதடி’ சோதத்தைப் பிழிகிறது.

பெரும்பாலான நிகழ்வுகள் ஒரே வீட்டிலேயே நடந்துமுடிய கேமரா கோணங்கள் மூலம் ஆடியன்ஸுக்கு அலுப்பு சலிப்பு வராதபடி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி சேகர்.

பெரிய பட்ஜெட் தேவைப்படுகிற கதைகள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும்போது சந்திக்கிற சிக்கல்களை மனிதனைப் போலிருக்கிற ரோபோ அதுஇதுவென சுவாரஸ்யம் கலந்துகட்டிய இந்த கதைக்களமும் எதிர்கொண்டிருக்கிறது. லாஜிக் பற்றி யோசிக்காத சில காட்சிகளும் படத்தில் உண்டு.

அதையெல்லாம் தாண்டி ரசித்துச் சிரிக்கவும், காதல் உணர்வில் மிதக்கவும் சான்ஸ் தருவதால், ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்பது படம் பார்த்தவர்களின் சாய்ஸாக இருக்கிறது!

-சு.கணேஷ்குமார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்