மை லார்ட் சினிமா விமர்சனம்

சாமானியன் ஒருவனை அதிகாரத் திமிர் சுற்றிவளைத்துத் தாக்க, அவன் துவண்டு விழுந்து, சுதாரித்து எழுந்து அந்த திமிருக்கு சமாதி கட்டுகிற கதை. எளிய மக்களுக்கெதிராக அரசாங்கத் துறைகளில் தாண்டவமாடுகிற அநியாய அக்கிரமப் போக்குகளை இயக்குநர் ராஜுமுருகனின் திரைக்கதை பார்ட் பார்ட்டாக பிரித்து மேய்ந்திருக்கிற ‘மை லார்ட்.’

அந்த பவர்ஃபுல் மத்திய அமைச்சருக்கு இரண்டு கிட்னியும் காலி. அவரது ரத்த வகை அரிதாக இருக்கவே, அதற்கு பொருந்தும்படியான கிட்னி யாரிடம் உள்ளது என ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாக தேடியதில் பொருத்தமானவர் என கண்டறியப்படுகிறார் அப்பாவி முத்துச் சிற்பி. கோவில்பட்டியில் இருக்கும் அவரை சென்னைக்கு கூட்டிவந்து, அவரது கிட்னியை அமைச்சருக்கு பொருத்துவதென்பது அடுத்தகட்டம். அதற்காக அமைச்சர் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் பரபரப்பாக இருக்க, ஆரம்பத்தில் ஒத்துக்கொண்ட முத்துச் சிற்பி ஒரு கட்டத்தில் மறுக்க அதன்பிறகு நடப்பதெல்லாம் விறுவிறுப்புதான்; அரங்கேறும் சம்பவமெல்லாம் அதிரடிதான்.

கிட்னி கிடைக்காவிட்டால் அமைச்சரின் உயிர் பிரிவது உறுதி என்ற நிலையில், முத்துச் சிற்பி எடுக்கும் முடிவே கிளைமாக்ஸ்… இந்த படுபயங்கர சீரியஸ் கதையில் காமெடி கலாட்டாக்கள் ஊறுகாய்போல் சேர்ந்துகொள்ள ரிலாக்ஸுக்கு கேரண்டி கிடைக்கிறது.

சசிகுமாருக்கு நல்லவராக, உலகமகா உத்தமராக, யார் எதை சொன்னாலும் நம்புகிற வெகுளித்தனம் நிரம்பியவராக, படிப்பறிவில்லாதவராக களமாடுவது பழகிப்போன விஷயம். அதை ரிப்பீட் செய்ய மீண்டுமொரு வாய்ப்பு. அவர் கதையின் நாயகன் எனும்போதே முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. கதைப்படி அவர் வள்ளலாரின் வழியில் வாழ்பவர் வேறு. அப்படியிருக்க அவர் ‘தனிப்பெருங் கருணை’ காட்டாமல் விடுவாரா? நன்றாகவே காட்டுகிறார். மார்ச்சுவரியில் சடலமாக கிடந்து, சட்டென எழுந்து பேன்டு வாத்தியங்கள் முழங்க அவர் போட்டிருக்கும் ஆட்டம் செம ரகளை.

சசிகுமாரை கணவனாக அடைய நடத்தும் நாடகம் மூலம் தன் பக்கம் கவனத்தை திருப்பி, கிட்னி திருட்டுக்கு ஆளாகி மீண்ட பரிதாபத்தோடு கணவன் படும் கஷ்ட நஷ்டங்களில் தோள் கொடுத்து கேரக்டரின் தன்மைக்கு தோற்றத்தாலும் நடிப்பாலும் பொருந்தி நிற்கிறார் சைத்ரா ஆச்சார்.

போலீஸ் உயரதிகாரியாக பாபநாசத்தில் காட்டிய அதிகாரத் திமிரை பல மடங்காக்கி ஆளுமையுடன் வெளிப்படுத்துகிற பொறுப்பு ஆஷா சரத்துக்கு. அமைச்சராக வருகிற, அவர் தான் வாழ யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை செயல்பாடுகளில் காட்டி மிரளச் செய்கிறார்.

அகிலத்தையே ஆட்டிப் படைக்கும் சக்தி கொண்டவர் என்றாலும் அவர் அநியாய அக்கிரமம் செய்பவராக இருந்தால் ஊர் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமல் ஓயமாட்டேன்’ என்ற கொள்கையுடன் பத்திரிகையாளராக வலம் வருகிறார் குரு சோமசுந்தரம். ஜோக்கரில் ஏற்ற கதாபாத்திரத்தின் அப்டேட் வெர்சன் போல தோன்றினாலும் இதில் காட்டியிருக்கும் துணிச்சலும் உடல்மொழியும் வேறோரு பரிமாணமாகியிருக்கிறது.

அமைச்சரின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்; அவரது உயிரைக் காப்பாற்ற எதை செய்வதாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஆரம்பகால பிரகாஷ்ராஜ் சாயலில் இருக்கும் அருள் எழிலனுக்கு அப்படியொரு கேரக்டர். செல்வாக்கை எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு பணிய வேண்டும், எங்கு குனிய வேண்டும் என்பதை புரிந்து நடப்பவராக காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கிறார்.

சட்டதிட்ட நடைமுறைகளைத் தாண்டி நல்ல மனிதனாக கதைநாயகனுக்கு தன்னால் செய்ய முடிந்ததை செய்வோம் என முடிவெடுத்து காய் நகர்த்தும் நீதிபதியாக ஜெயப்பிரகாஷ், அதிகாரத் திமிரை அடக்க முயற்சிப்பவர்களுக்கு துணை நிற்கிற வழக்கறிஞராக அறம் பட இயக்குநர் கோபி நயினார் என பரிச்சயமான சிலருடன், பரிச்சயமில்லாத பலருக்கும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள். அதை அவர்கள் உணர்ந்திருப்பது நடிப்பில் தெரிகிறது.

நீரவ் ஷாவின் தரமான இயல்பான ஒளிப்பதிவுக்கும், கதையோட்டத்தின் உணர்வை உள்வாங்கியிருக்கும் ஷான் ரோல்டனின் பின்னணி இசைக்கும் மதிப்பெண்களை வாரி வழங்கலாம். ‘எசக்காத்தா நெஞ்சில’ பாடல் மனதில் தங்குகிறது.

படத்தில் குறையாகத் தெரிகிற இயல்புக்கு ஒத்துவராத சில காட்சிகள், ‘நாம் பார்த்துக் கொண்டிருப்பது சினிமா’ என்ற நினைப்பை அழுத்தமாக்குகிறது. உறுப்புதானம் என்ற பெயரில் நடக்கும் மருத்துவ உலக அதிர்ச்சிகளை பல படங்களில் பல விதமாக பார்த்திருக்கும் நமக்கு, கிட்னி தானமும் அது சார்ந்தும் நடக்கிற சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த படம் ‘இன்றும் நம்மிடையே வள்ளலார்கள் வாழ்கிறார்கள்’ என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

மை லார்ட் – அன்பே சிவம்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here