Home விமர்சனம் மைலாஞ்சி சினிமா விமர்சனம்

மைலாஞ்சி சினிமா விமர்சனம்

வைல்டு லைஃப் போட்டோகிராபர் சூர்யா அரிய வகை பறவையொன்றை போட்டோ எடுக்க ஊட்டிக்கு போகிறான். அங்கு அவனைச் சந்திக்கும் இளம்பெண் சாரு இனிமையாக பேசிப் பழகுகிறாள். அதனால் அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு உருவாகிறது. அவள், அவனை நண்பனாக நினைத்துப் பழகுகிறாள். அதே நட்போடு அவனிடம், தான் ஒரு இளைஞனை காதலித்ததாகவும், அவன் சென்னைக்கு போய்விட்டதாகவும், அவனுடன் தொடர்பு விட்டுப்போய்விட்டதாகவும் சொல்கிறாள். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அவனை கண்டுபிடித்து தன்னை அவனுடன் சேர்த்து வைக்கச் சொல்கிறாள்.

அதைக் கேட்டு சூர்யா அதிர்ச்சியடைந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக சொல்கிறான். சொன்னபடி செய்யவும் நினைக்கிறான். செய்யாமலிருந்து அவளது மனதில் இடம் பிடிக்கவும் நினைக்கிறான்.

நினைத்ததில் எதை செய்கிறான் என்பது கதையின் பரபரப்பான பகுதிகளாக இருக்க சாரு காதலனுடன் இணைந்தாளா, சூர்யாவின் மனதில் நுழைந்தாளா என்பது மீதிக்கதை…

சூர்யாவாக ஸ்ரீராம் கார்த்திக். மனதுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும்போது ஹீரோவாகவும், அவள் அவளது காதலனுடன் சேர்ந்து விடக்கூடாது என்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது வில்லனாகவும் இருவேறு முகம் காட்டுகிறார்.

சாருவாக கிரிஷா குருப். ஆங்கிலோ இந்தியப் பெண் கேரக்டருக்கு அவரது முகவெட்டு நல்ல பொருத்தம். சித்தியின் கெடுபிடிகளில் சிக்கி, சித்தியின் குடிகார தம்பி தருகிற லவ் டார்ச்சரை அனுபவித்துக் கொண்டிருப்பவராக, ஸ்ரீராமிடம் தன் காதலன் பற்றி சொன்னபின் மனம் லேசாகி விட்டவராக, காதலனுக்காக காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைபவராக, ஏமாற்றத்துக்குப் பழகி விட்டவராக, அந்த ஏமாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகாதவராக, ஸ்ரீராம் மீது காதல் வயப்பட்டவராக, அதை சொல்ல முடியாமல் தவிப்பவராக, பழைய காதலனை மீண்டும் சந்தித்தபின் அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என குழம்பித் தவிப்பவராக… நடிப்பில் வெரைட்டி காட்ட நல்ல வாய்ப்பு. ஒருவித குழந்தைத்தனத்துடன் காட்டியிருக்கிறார்.

இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள். சிங்கம் புலி, முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் படத்தில் உண்டு.

‘இசைஞானி’ இளையராஜா ஒன்றிரண்டு பாடல்களில் தென்றலின் இதத்தை பரவச் செய்து 90 காலகட்டத்திற்கு கூட்டிப் போகிறார். எந்த பக்கம் கேமரா வைத்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சி தருகிற ஊட்டியின் பரந்து விரிந்த பசுமையை, பிரமாண்டத்தை பேரழகு ததும்ப பதிவு செய்திருக்கிறது செழியனின் கேமரா.

மெல்லிய காதல் கதையை திரில்லருக்கான விறுவிறுப்போடு பரிமாற நினைத்த புதுமுக இயக்குநர் அஜயன் பாலா, திரைக்கதையில் அதற்கேற்ற அம்சங்களை தவறவிட்டிருக்கிறார்.

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்