‘பெண்களை தெய்வமாக மதிப்பதெல்லாம் இருக்கட்டும்; முதலில் அவளை மனுஷியாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’ என வலியுறுத்தும் சப்ஜெக்ட். தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் நடந்த நல்ல சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ‘நூறுசாமி.’
தன் மகன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குப் போகத் தயாராகிவிட்ட காலகட்டத்தில், அந்த பெண்மணிக்கு மறுமணம் செய்துகொள்ளும் விருப்பம் தொற்றுகிறது. மகன் எதிர்க்க, அந்த விருப்பத்தை மனதில் புதைத்துக் கொள்கிறார். ஒருசில வருடங்கள் கடந்தோட அதே மகன் அம்மாவின் விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்ட, இப்போது அம்மா மறுக்கிறார். மகன் பேசிப்பேசி சம்மதிக்க வைக்கிறான். மாப்பிள்ளையும் கிடைத்துவிடுகிறார். விடிந்தால் கல்யாணம்.
‘முடிந்தால் நடத்திப் பாருங்கள்’ என்கிற அளவுக்கு அந்த கல்யாணத்துக்கு சொந்த பந்தம் துவங்கி, ஊர் மக்கள், காவல்துறை என எல்லா பக்கமிருந்தும் வெறித்தனமான எதிர்ப்பு.
அதற்கு காரணம் என்ன? மறுமணம் நடந்ததா இல்லையா?
இந்த கேள்விகளுக்கு பதில்களாய் விரியும் இயக்குநர் சசியின் திரைக்கதை மனதை உலுக்குகிறது…
கதைநாயகி ஸ்வாசிகாவுக்கு ஒரு பெண், குறிப்பாக கணவனை இழந்து தனியாக வாழும் பெண் தன் விருப்பு வெறுப்புகளை அதன் தன்மை மாறாமல் வெளிப்படுத்துவதற்கு குடும்பத்தில், சமூகத்தில் எத்தனை தடைகள், எத்தனை கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை துல்லியமாக வெளிப்படுத்துகிற கேரக்டர். அதற்கு இப்படியெல்லாம் உயிரூட்ட முடியுமா என்கிற அளவுக்கு பரிதாப முகத்தோடும் அப்பாவித் தனத்தோடும் நடிப்புப் பங்களிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார்.
தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்பும் எளிய மனிதனாக தனக்கு கிடைத்த அரைமணி நேரத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார் விஜய் ஆண்டனி.
ஸ்வாஷிகாவின் மூத்த மகனாக அஜய் திஷான். ஒரு கட்டம் வரை உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பவன், ஒரு கட்டத்துக்கு மேல் பக்குவப்பட்ட மனநிலையில் அம்மாவுக்கான கல்யாண ஏற்பாடுகளில் ஈடுபட்டு சவால்களைச் சந்திப்பவன் என மனதில் இடம்பிடிக்கும் விதமான பாத்திரம். பெர்ஃபாமென்ஸ் குறை சொல்ல முடியாத அளவில் இருக்கிறது.
பாலாஜி சக்திவேல் அலட்டலில்லாத வில்லத்தனம் காட்ட, அவருக்கு உறுதுணையாக நக்கல் நையாண்டியோடு வந்து போகிறார் ஜென்சன் திவாகர். கருணாஸை காமெடிக்கு இழுத்துப் போட்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தால், கொலை செய்யவும் துணிகிற கொடூரனாக திடுதிப்பென வேறொரு முகம் காட்டுகிறார்.
ஸ்வாஷிகாவின் இளைய மகனாக சக்தி, இன்னபிற முக்கியத்துவமுள்ள கேரக்டர்களில் காவ்யா அனில், பாடினி குமார், பகவதி பெருமாள், தாமரைச்செல்வி, முனீஸ்காந்த் உள்ளிடோர் தென்படுவதை பார்க்கலாம்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் ‘அம்மா அம்மாதான்’, ‘மாயக் கனவோ’ பாடல்கள் வெகுநாள் நினைவில் தங்கும். பழமை அடையாளங்கள் தொலைக்காத கிராமத்து வீடுகள், பரந்து விரிந்த காடு கரை, கரும்புத் தோட்டம் என பல அம்சங்களை பக்காவாக சுருட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷ்.
மறுமணம் என்கிற விஷயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இத்தனை ஆழமாய் அகலமாய் எந்த படமும் அலசி ஆராய்ந்து பதிவு செய்ததாக வரலாறு இல்லை. குறைகள் சில இருந்தாலும் நூறு சாமியை புதிய வரலாறாக படைத்திருப்பதற்காக இயக்குநர் சசிக்கு தாராளமாய் போடலாம் பாராட்டுப் படையல்!
-சு.கணேஷ்குமார்

