கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், ஹாரர் திரில்லர் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்; அப்படியொரு கதையம்சத்தில் ‘நறுவீ.’
குன்னூரிலிருந்து சிலபல கி மீ உயரத்தில் இருக்கிற அந்த கிராமத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, யாரால் நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள இரண்டு இளைஞர்கள், மூன்று இளம் பெண்கள் குழுவாக புறப்பட்டுப் போகிறார்கள். போனவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்கிறார்கள் என்பது கதை…
அந்த குழுவில் இருக்கும் பெண்களில் ஒருவரது தாய் மாமன் பல வருடங்களுக்கு முன் அந்த கிராமத்தில் ஆசிரியர் பணியில் இருந்ததும், பின்னர் அவர் காணாமல் போனதும், அவருக்கு என்ன ஆனது என்பதையும் விரிவாக விளக்கியபடி கடந்தோடுகிறது திரைக்கதை…
சரியான போக்குவரத்து வசதியில்லாத கரடு முரடான மலைப் பகுதிகளில் வெகு தூரம் பயணித்துச் சென்று, மலை கிராம மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் முழு ஈடுபாடு காட்டுவது, மாணவி ஒருவரின் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவித்ததன் பலனாக விபரீத முடிவை சந்திப்பது என தனக்கான காட்சிகளை எளிமையான நடிப்பால் நிரப்பியிருக்கிறார் கதைநாயகனாக வருகிற டாக்டர் ஹரீஷ்.
படித்து முன்னேற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிற சிறுமி மாதவி, கதை தன்னைச் சுற்றி சுழல்கிறது என்பதை உணர்ந்து தன் நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார் மாதவியாக வருகிற சிறுமி.
என்ன நடந்தது ஏது நடந்தது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம், அவ்வப்போது தன்னைப் பின் தொடரும் அமானுஷ்ய சப்தத்தால் உருவாகும் பயம் என நீள்கிற காட்சிகளுக்கேற்ற முகபாவங்களை தன் நடிப்பில் பொருத்தமாக பிரதிபலித்திருக்கிறார் பாடினி குமார்.
காணாமல் போன மாமாவை நினைத்து நினைத்து ஏங்குவது, அடிக்கடி பேய் பிடித்தவர் போல் நடந்துகொள்வது என மிரட்சியான நடிப்பைத் தந்திருக்கிறார் கேத்ரின் வருணா.
கதைநாயகிகளில் ஒருவரான வின்சுவின் அழகும் துடிப்பான நடிப்பும் கவர்கிறது; கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சி தருகிறது.
தன்னிடம் பணி புரிய விரும்பும் பெண்களுடன் மன்மத லீலையில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கிற டீ எஸ்டேட் அதிபராக மதன் எஸ் ராஜா மென்மையான வில்லத்தனம் காட்டி நகர்கிறார்.
பாடினியின் காதலராக வி.ஜே.பப்பு, நாயகனின் தந்தையாக ஜீவா ரவி, அம்மாவாக பிரவீணா, சிறுமி மாதவியின் தந்தையாக முருகானந்தம் என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் நடிப்பில் குறையில்லை.
திரும்பிய பக்கமெல்லாம் பசுமை, அதன்மேல் பரவிப் படரும் பனிப் பொலிவு, தொட்டுவிடுகிற தூரத்தில் மேகக்கூட்டம், அங்குமிங்குமாய் பாய்கிற அருவி என கதை நிகழ்விடத்தின் அழகை வாரிச் சுருட்டி கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறது ஆனந்த் ராஜேந்திரனின் கேமரா.
பரபரப்புமிக்க கதையோட்டத்துக்கு ஏற்ற அதிரடியான பின்னணி இசையைத் தந்திருக்கிற அஸ்வத், கதையின் வேகத்தைத் தடுக்கும்படி அணிவகுக்கும் பல பாடல்களில் ‘ஜினுக்கி ஜிக்கா’, ‘மாயக்காரா’ பாடல்களை ஓரளவு ரசிக்க வைக்கிறார்.
மலை கிராம மக்கள் கல்வி கற்பதற்கு தேவையான வசதிகள் இல்லாதிருப்பது, கல்வி கற்பதற்கு இருக்கிற தடைகள் என சில விஷயங்களை சமூக அக்கறையோடு அணுகியிருக்கிற இயக்குநர் சுபாரக், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் ரசிகர்களிடமிருந்து ‘நறுவீ’க்கான பாராட்டுக்கள் அருவியாய் கொட்டியிருக்கும்!
-சு.கணேஷ்குமார்

