சில உணவுகளை நிறுத்தி நிதானமாக சாப்பிட வேண்டும். சில படங்களைப் பார்க்கும்போதும் அந்த நிதானம் தேவைப்படும். நிமிடத்திற்கு நிமிடம் அதிரடியான சம்பவங்களை, காமெடி களேபரங்களை எதிர்பார்க்கிறவர்களுக்கு அப்படியான படங்கள் சலிப்பூட்டும். முக்கோண காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அனுபவிப்பதற்கும் நிதானம் ரொம்பவே முக்கியம்.
முக்கோண காதல் கதையில் ஏகப்பட்ட படங்களைப் பார்த்திருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் என்றாலும் கதை சொன்ன விதத்திலும் மேக்கிங்கிலும் கொஞ்சம் பெட்டர்தான் இந்த ‘ஓ பட்டர்ஃபிளை.’
கணவர் இறந்து விட்டார். அவரைக் கொன்றது நான்தான் என்கிறார் மனைவி. இப்படி கிளைமாக்ஸை முதலில் காண்பித்து விட்டு, ‘என்ன நடந்தது தெரியுமா?’ என்பதுபோல் திரைக்கதையின் பயணம் துவங்குகிறது.
இளம்பெண் அனிதாவும் அவளது கணவனும் மன நிம்மதிக்காக கொடைக்கானலுக்கு சென்று தங்குகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அந்த கணவர், தன் நண்பர் என்று சொல்லி ஒரு இளைஞனைக் கூட்டி வருகிறார்.
மூன்று பேருமாக சரக்கடித்தபடியே அரட்டையில் ஈடுபட, கணவனுக்கு தான் அழைத்து வந்தது தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பது தெரிய வருகிறது. அதன்பின் நடக்கும் விபரீதங்களே மீதிக் கதை… அனிதாவின் கணவர் எப்படி இறந்தார் என்பது தெரியும்போது ஆச்சரியத்தில் விழ வேண்டியிருக்கிறது. இயக்கம் விஜய் ரங்கநாதன்
அன்பான கணவனுக்கும் டாக்ஸிக் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிப்பவராக நிவேதிதா சதிஷ். மனப்பதட்டத்தை, காதல் உணர்வை, கணவன் மீதான நேசத்தை என கலந்துகட்டி வெளிப்படுத்தும் கேரக்டரில் மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார்.
கணவராக வருகிற அதுலுக்கு ‘எதுவுமே தன் கன்ட்ரோலில் இல்லை’ என்பதை விதவிதமாக பிரதிபலிக்கும் விதமான கதாபாத்திரம். வேலை பறிபோன மன உளைச்சல், மனைவியின் முன்னாள் காதலை தெரிந்து கொண்டதோடு காதலனோடு சந்திப்பு சண்டை சச்சரவு என அவருக்கான காட்சிகள் கனமானவை; ரணமானவை. அவரிடமிருந்து அதற்கேற்ற இயல்பான நடிப்பு கிடைத்திருக்கிறது.
வாழ்க்கையை ஜாலியா அனுபவிக்கணும் மாப்ள’ என மிதப்பாக திரிகிற இந்தக்கால இளைஞர்களின் ஜெராக்ஸ் போன்ற கேரக்டரில், மேன்லி லுக்கிலும் அசத்துகிறார் முன்னாள் காதலராக வருகிற சிபி சந்திரன். ஹீரோ போலிருப்பவர் வில்லனைப் போல் நடந்து கொள்கிறார்.
பட்டாம்பூச்சிகளின் காதலராக, அவற்றுக்கு பெயரிட்டு அழைத்து செல்லம் கொஞ்சுபவராக, ஒரு பட்டாம்பூச்சி காணாது போனதும் அதை தேடி காட்டுக்குள் அலைவதுமாக நாசரின் பாத்திரமும், அவர் உணரும் மரண வாசனை’யும் தனித்துவமாக இருக்கிறது. நடிப்பை வழக்கம்போலவே பெஸ்டாக கொடுத்திருக்கிறார்.
சோடாபுட்டி கண்ணாடியின் வழியாக எதிரில் இருப்பவர்களைப் பார்த்து பலன் சொல்லும் பெண்மணியாக கீதா கைலாசம் தன் பங்கிற்கு குறையின்றி நடித்துக் கடக்கிறார்.
கெஸ்ட் ரோல் போலிருந்தாலும் லெஷ்மிபிரியா சந்திரமெளலிக்கு முக்கியத்துவமிருக்கிறது.
அவர்களைத் தவிர ஒரு சிறுமி மின்னல் போல் அப்படியும் இப்படியும் வந்து போக, வேறு கதாபாத்திரங்கள் எதுவும் தென்படவில்லை. கதைக்குத் தேவையுமில்லை.
கதையின் பெரும்பான்மையான பகுதிகள் வீடுகளுக்குள்ளேயே நடக்க, மிச்சசொச்ச காட்சிகளில் கொடைக்கானலை எப்படியெல்லாம் வளைத்துச் சுருட்டினால் அழகு கூடும் என்பதை தெரிந்து கோணங்களை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன்.
வைசாக் சோமநாதனின் பின்னணி இசை சைகலாஜிக்கல் திரில்லருக்கு செம பொருத்தம்.
இந்த படம் கமர்சியல் அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்தி தருவது சந்தேகம்தான் என்றாலும், ‘வித்தியாசமான முயற்சிகளை விரும்புவோருக்கு நல்ல சாய்ஸ்’ என உறுதியாக சொல்லலாம்!
-சு.கணேஷ்குமார்

