இந்த படத்தின் இசை, பல படங்களுக்கு உயிர் கொடுத்த இளையராஜாவின் இசை போலிருக்கிறது! -‘ஒன் வே’ படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு

கதைநாயகனாக பிரபஞ்சன், கதைநாயகியாக ஆரா, முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ள படம் ‘ஒன் வே.’

ஜி குரூப் புரொடக்‌ஷன்ஸ்’ பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (4.10. 2022 செவ்வாய்) சென்னையில் நடந்தது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

விழாவில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான பிரபஞ்சன் பேசுகையில், “ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம். நல்ல படம் என்பதை விட மிக வித்தியாசமன ஒரு படமாகவும், இன்று சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்” என்றார்.

நடிகை ஆரா பேசுகையில், “இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தின் மூலம் தான் காட்சிகளை எப்படி உள்வாங்கி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன். இந்த படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது” என்றார்.

படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பேசுகையில், “இந்த படத்திற்கு இளையராஜா சாரை தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது தான் ஆடிசன் வைத்து இசையமைப்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இசையமைப்பாளருக்கு ஆடிசன் வைத்தது நாங்களாக தான் இருப்போம். ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிக சிறப்பாக செய்தார். அவருடைய வேலை எங்களுக்கு பிடித்தது அதனால் அதான் அவரை இசையமைப்பாளராக்கினோம். அவரும் மிக சிறப்பாக பணியாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. டிரெய்லரில் பார்த்ததை விட பல மடங்கு படத்தில் இருக்கும். இது சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு பான் இந்தியா படம். சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. பெரிய படமாகவே இருக்கும். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம். படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்” என்றார்.

நடிகை குஷ்பு பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். காரணம், என் அண்ணனை (அப்துல்லா) இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காகதான் நான் இங்கு வந்தேன்.
இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தால் இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விசயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜா சாரின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஆரா, இயக்குநர் சக்திவேல் என அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “ ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்தோம். ஏதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருந்தது. பலர் ஆங்கில படங்களை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இயக்குநர் சக்திவேல் தமிழ் படத்தை ஆங்கிலப்படம் போல் எடுத்திருக்கிறார். காட்சிகள் நிமிர வைக்கிறது. படத்தில் பெரிய விஷயம் இருப்பது தெரிகிறது.
சர்வதேச பிரச்சனையை கிராமத்துக் கதையுடன் மிக நேர்த்தியாக சேர்த்து அவர் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும்” என்றார்.

‘ஒன் வே’ படத்தின் தொழில் நுட்பக்குழு:
ஒளிப்பதிவு – முத்துக்குமரன்
இசை – அஷ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு – சரண் சண்முகம்
சவுண்ட் மிக்ஸ் – அபிஷேக் தர்ஷன்
டிஐ – கார்த்திக்
சண்டைக்காட்சி – விக்கி
மக்கள் தொடர்பாளர் – ஹஸ்வத் சரவணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here