மெடிக்கல் கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் ஆரம்பத்திலிருந்து கிளைமாக்ஸ் வரை பரபரப்பையும் திருப்பங்களையும் அள்ளித் தெளித்திருக்கும் ‘அதர்ஸ்.’
ஒரு விபத்து நடந்து அதில் பெண்கள் மூன்று பேர் மரணமடைய, அவர்கள் யார் என தோண்டித் துருவினால் அவர்கள் ஆதரவற்றவர்கள் என்பதும், விபத்தை ஏற்படுத்தி அந்த பெண்கள் கொல்லப்பட்டதும் போலீஸுக்கு தெரியவருகிறது.
இப்படி தாறுமாறாக துவங்கும் கதையில் அந்த பெண்களைக் கொன்றது யார், கொன்றது ஏன், கொலையாளியை போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதையெல்லாம் காண்பித்தபடி நகர்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்… கொலைக்கான காரணம் அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. இயக்கம்
அறிமுக நாயகன் ஆதித்ய மாதவன் போலீஸ் உயரதிகாரிக்கான கம்பீரத்தை தோற்றத்திலும், கொலையாளியியைக் கண்டுபிடிக்கும் பணியில் துடிப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் அரங்கேறும் அநியாயங்களைப் பார்த்துக் கொதித்துக் கொந்தளிக்கும்போது கவனிக்கத்தக்க நடிப்பைத் தந்திருக்கிறார் கெளரி கிஷன்.
ஹீரோவுடன் கைகோர்த்து, நடக்கும் கொலைகளின் பின்னணியை அலசி ஆராயும் காவல்துறை அதிகாரியாக நடையிலும் நடிப்பிலும் கெத்து காட்டியிருக்கிறார் அஞ்சு குரியன்.
காவல்துறை அதிகாரியாக வருகிற முனீஷ்காந்த் ராம்தாஸ் தன் பங்கிற்கு லேசாக சிரிப்பூட்டினாலும் சீரியஸான கதையோட்டத்தில் எதையுமே ரசிக்க முடியவில்லை.
பெண்ணாக பிறந்து காலப்போக்கில் அதர்ஸாக (வேறொரு பாலினம்) மாறுகிற சுமேஷ் மூரின் வில்லத்தனம் வெறித்தனம்.
‘நண்டு’ ஜகன், இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர் உள்ளிட்டோருக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கிறது.
‘ராட்சசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்ற ஒரு சிலருக்கு இந்த படத்தில் இடமளித்திருப்பதைப் போல, தனது பின்னணி இசையால் மிரட்டி அந்த படத்திற்கு அசுர பலம் சேர்த்த ஜிப்ரானே இந்த படத்துக்கும் இசையமைத்து அதே பலத்தை இந்த படத்துக்கும் வழங்கியிருக்கிறார்.
படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பவர்களில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு பெரும் பங்குண்டு.
மெடிக்கல் கிரைமில் இதுவரை பார்க்காத குற்றச் செயலை அறிமுகப்படுத்தி ஆடியன்ஸுக்கு புது அனுபவம் தந்து,
அதர்ஸாக மாறியவர்களை அரவணைக்காவிட்டாலும் அவமானப்படுத்துவது, துன்புறுத்துவது மாதிரியான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதை உணர்த்தியிருப்பதற்காகவும் படத்தின் விறுவிறுப்பான உருவாக்கத்துக்காகவும் இயக்குநர் அபின் ஹரிஹரனை பாராட்டலாம்.
-சு.கணேஷ்குமார்

