ஹாலிவுட் படம் போல் தயாராகி பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! -‘போர் தொழில்’ படத்தின் வெற்றி விழாவில் சரத்குமார் பெருமிதம்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் உருவான படம் ‘போர் தொழில்.’ வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வெற்றி விழா 30.6. 2023 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், ”விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிகை விமர்சனங்களால், ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்த படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் படம்போல பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும்” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ”மக்கள் இந்த படத்தை தங்கள் படமாகக் கொண்டாடி வருகிறார்கள். எல்லோரும் என்னைப் பார்த்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ”இந்த படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், ”இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்துள்ளார்கள். வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

விநியோகஸ்தர் தீபா பேசுகையில், ”இந்த படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களைத் தருவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here