ஹிப் ஹாப் தமிழா ஆதி கதை நாயகனாக நடிக்க, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியிருக்கிற ‘P T சார்’ திரைப்படம் வரும் மே 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தனர்.
நிகழ்வில், ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியபோது, ”எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள், 4 வருட இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு எல்லோரும் பெரும் பாராட்டுக்களைத் தந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது. ஒரு ஆடியன்ஸாக அட்டகாசமான முதல் பாதி, எமோஷலான இரண்டாம் பாதி, நல்லதொரு க்ளைமாக்ஸ் என உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்.
இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றிகள். ஐசரி சாருக்கு நன்றி, இந்தக்கதையை முதலில் ஒப்புக்கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார். அவர் எப்படியான படங்கள் வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ஆனால் இப்படம் செய்ததற்கு நன்றி. அவருடன் பயணித்தது மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய விசயங்கள் சொல்லித் தந்தார். ஒரு குடும்பத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியபோது, ”ஆதியிடம் கதை சொன்னவுடனே பண்ணலாம் என்று சொன்னார், அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடுத்ததாக வேல்ஸ் பிலிமிஸ் கிடைத்தது வரம். ஐசரி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். இந்தப்படம் மிக மிக ஜாலியான படம். மிகப்பெரிய நட்சத்திரக்கூட்டம் படத்தில் நடித்திருக்கிறார்கள். காஷ்மீரா ஒரு அழகான ரோல் செய்துள்ளார், அனிகாவிற்கு அனைவரும் பேசும் ஒரு ரோலாக இது இருக்கும். மெச்சூர்டான விசயத்தைக் கையாளும் ரோல், அழகாகச் செய்துள்ளார். இந்தப்படம் குடும்பத்தோடு அனைவரும் கொண்டாடும் ஒரு படமாக, சந்தோசமான படமாக இருக்கும்” என்றார்.
வேல்ஸ் பிலிம்ஸ் டாக்டர் ஐசரி கே கணேஷ் பேசியபோது, ”வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்த படம் மூலம் கிடைத்துள்ளது. படம் இடைவேளை வரை ஜாலியாக இருக்கும். இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள். எல்லா பள்ளிகளிலும் பிடி சாருக்கும் டீச்சருக்கும் காதல் என வதந்தி இருக்கும் நான் படித்த பள்ளியிலும் இருந்தது. அந்த ஞாபகங்களை இந்தப்படம் மீண்டும் கொண்டு வந்தது” என்றார்.
நடிகைகள் காஷ்மீரா பர்தேஷி, அனிகா சுரேந்திரன், பிரணிகா, ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.