சோனியா அகர்வால் நடிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளர் குரு.ஏ இயக்கியுள்ள திரைப்படம் ‘பருத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய நடிகை சோனியா அகர்வால் ”பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் குரு ஏ ”என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷூட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம்” என்றார்.
நடிகர் பிரஜின் ”சின்ன முயற்சிகளே பெரிய மரமாகும். குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் இன்று இருக்கும் நல்ல இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பார். அவருக்கு மிகச்சிறப்பான இடம் கிடைக்கும். சோனியா மேடம் இன்றும் பார்க்க அப்படியே இருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.
நடிகர் உதயா ”இயக்குநர் குரு எனக்கு நீண்ட கால நண்பர். தரமான படமெடுத்து விட்டு உங்களை அழைப்பேன் என்றார். அவர் எடுக்கும் எல்லா படமும் தரமான படம் தான். நல்ல படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். என் தம்பி குருவுக்கு இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சோனியாவுக்கு நானும் ரசிகன். அவர் இப்படி ஒரு கேரக்டர் நடித்திருப்பது அருமை. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் திருமலை ”டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. படம் ஜெயிக்க வாழ்த்துகள்” என்றார்.
தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம், தயாரிப்பாளர் லட்சு கணேஷ், நடிகர் குகன் சக்கரவர்த்தி, SGR Film Factory சார்பில் ஶ்ரீதர், நடிகர் திலீஷ், நடிகர் ரிஷி, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

