‘பாசக்கார பய’ சினிமா விமர்சனம்

தாய்மாமன் பாசத்தை மையப்படுத்திய படம்.

தன் அக்கா மீதான பாசத்தினால் ஒரு கொலை செய்துவிட்டு, அதற்கான தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து விடுதலையாகி சொந்த ஊருக்கு வருகிறான் குணா. வந்தவன் தன் அக்காவின் மகள் தேன்மொழிக்கு திருமணம் செய்து வைப்பதை தன் கடமையாக நினைத்து வரன் பார்க்கிறான். தேன்மொழி, குணாவிடம் ‘நான் சிறுவயதிலிருந்து உன்னைத்தான் விரும்புகிறேன். உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்று சொல்கிறாள்; சொன்னதில் உறுதியாகவும் இருக்கிறாள்.

சுப்ரமணி என்ற இளைஞன் தேன்மொழியை காதலிக்கிறான். தாய்மாமனை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கும் தேன்மொழி, சுப்ரமணியின் காதலை ஏற்க மறுக்கிறாள்.

அந்த கிராமத்தில் அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து, திருப்பிச் செலுத்த முடியாத பெண்களை தன் காமப் பசிக்கு விருந்தாக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன். ஒருசில காரணங்களால் அவனுக்கும் குணாவுக்கும் பகை முற்றுகிறது.

கதையின் முன்பாதி இப்படி பயணிக்க, அக்காவின் மகளை மணந்துகொள்ள தாய்மாமன் குணா சம்மதித்தானா? தேன்மொழியை விரும்புகிற சுப்ரமணியின் காதல் என்னவானது? குணாவுக்கும் அநியாய வட்டி ஆசாமிக்குமான பகை என்ன மாதிரியான விளைவை உருவாக்கியது? இந்த கேள்விகளுக்கான பதில்களை பரபரப்போடும் விறுவிறுப்போடும் தருகிறது கதையின் மறுபாதி. இயக்கம்: விவேக பாரதி

பாசக்கார தாய்மாமன் கதாபாத்திரத்துக்கு விக்னேஷ் சரியான தேர்வு. அக்கா மீது பாசம், அக்கா பெண் மீது பிரியம் என முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். அக்காவின் மகள் தன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காக குடித்துவிட்டு ரகளை செய்வது நெகிழ வைக்கிறது.

மனம் முழுக்க மாமன் மீதான நேசம் பரவியிருக்க, தன்னை காதலிப்பவனிடம் காதலை மறுக்கிற கனமான கதாபாத்திரத்தில் காயத்ரி ஐயர். உணர்வுபூர்வமான நடிப்பால் தன் பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். சில நிமிடங்கள் வரக்கூடிய பிளாஷ்பேக்’கில் வேறோரு கேரக்டரில் என்ட்ரீ போடுவது எதிர்பாராதது!சுப்ரமணியாக பிரதாப். தோற்றத்தில் இளமை, பார்வையில் காதல், பேச்சில் கனிவு என அலட்டலற்ற நடிப்பால் ஈர்க்கிறார். மனதுக்கு பிடித்தவள் டெய்லராக இருக்க, அவளது பிசினஸ் சூடுபிடிக்க கிராமத்துப் பெண்களுக்கு ஜாக்கெட் துணியெடுத்துக் கொடுத்து அதற்கு தையல்கூலியும் கொடுக்கிற காட்சி ரசனைக்கு விருந்து!

கஞ்சா கருப்புக்கு வேலை வெட்டிக்குப் போகாமல் சீட்டாட்டத்தில் பொழுதைக் கழிப்பதோடு பிறரையும் தூண்டுகிற கதாபாத்திரம். போகிற போக்கில் விக்னேஷ் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கு உலை வைப்பது அசத்தல்!

வில்லனாக வருபவரின் நடிப்பும் நன்று!

சௌந்தர்யன் இசையில் ‘ஒருத்தர ஒருத்தர பாத்துக்கிட்டு’, ‘நெஞ்செல்லாம் தித்திக்குதே’ பாடல்களில் காதல் வழிகிறது. மனம் கவர்கிற இன்னும் இரண்டு பாடல்களும் உண்டு.

மயிலாடுதுறையை சுற்றியுள்ள வயல் வரப்புகளை, காடு மேடுகளை, வறண்ட நீர்நிலைகளை அதனதன் இயற்கைத் தன்மையோடு பதிவு செய்திருக்கிறது கே.வி.மணியின் கேமரா.

கனமான உணர்வுகளை கடத்த வேண்டிய காட்சிகள் சாதாரணமாக கடந்து போவது, சுலபமாக யூகிக்க முடிகிற காட்சிகள் படத்தின் பலவீனம்.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பாசக்கார பய பலமானவனாக மாறியிருப்பான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here