விரைவில் 100-வது படம்… ‘பருத்திவீரன்’ சுஜாதா இப்போ மினி ஆச்சி! 

கமல் இயக்கிய ‘ விருமாண்டி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, ‘பருத்தி வீரன்’ சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ் பெற்றார்.

அதற்குப் பிறகு ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார். தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 90 படங்களைக் கடந்து 100-வது படத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் சுஜாதா.

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்போது ‘கோலிசோடா 1.5 ‘ மற்றும் பெயரிடப்படாத புதிய ஐந்து படங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் ‘தமிழ்நாடு நவ்’ என்ற அமைப்பு கோல்டன் கார்பெட் அவார்டு என்ற விருதை அளித்தது. ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சிம்பு தேவன் இணைந்து இந்த விருதை வழங்கினார்கள். அதே விழாவில் சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி‘ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

பட்டம் பெற்ற உற்சாகத்திலிருந்தவரை சந்தித்தோம்…

“நான் முதல் முதலில் இயக்குநர் கமல் அவர்களால் ‘விருமாண்டி’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால்,
அந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கதாநாயகி அபிராமிக்கு மதுரை வட்டார வழக்கு சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் என்னை முதலில் கேட்டார்கள். ஒரு நண்பர் அழைத்ததால் கமல் சாரைச் சந்தித்தேன். நான் தயங்கிய போது, அவர் மிகவும் சகஜமாகப் பேசினார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவர், ‘நாங்கள் எழுதி வைத்துள்ள வசனங்களை மதுரை வட்டார மொழிக்கு மாற்றி நீங்கள்தான் கதாநாயகிக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்.

நான் பேசிக் காட்டியதைப் பார்த்த பிறகு, நீங்களே ஏன் ஒரு கதாபாத்திரம் செய்யக்கூடாது?’ என்றவர், செய்யுங்கள் என்றார். அப்படித்தான் நான் பசுபதிக்கு ஜோடியாக அந்தப் படத்தில் பேச்சியாக நடித்தேன்.
அந்தப் படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. மேலும் பல காட்சிகளில் நான் வந்திருப்பேன். அப்போது நான் கருவுற்றிருந்தேன். எனவே நடிக்க முடியவில்லை. படம் வெளிவருவதற்கு முன்பு எனக்குக் குழந்தை பிறந்து விட்டது. என் இரண்டாவது குழந்தை பிறந்து 30 நாள் கழித்து தான் ‘விருமாண்டி’ வெளியானது.

மீண்டும் கமல் சாரைப் பார்க்கச் சென்றபோது கைக்குழந்தையுடன் சென்றேன். அப்போது என்ன அதற்குள் சின்ன பேச்சியுடன் வந்து விட்டீர்கள்?’ என்றார்.

‘விருமாண்டி ‘க்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் ‘பருத்திவீரன்’ படம் வந்தது. எனது அறிமுகப் படமாக இயக்குநர் கமல் அவர்கள் வாய்ப்பு வழங்கிய ‘விருமாண்டி’ வந்தது. எனது முகவரியாக ‘பருத்திவீரன்’ படம் அமைந்துவிட்டது .அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்தன.

நான் எதிர்பாராத வகையில் அந்தப் பாத்திரம் அமைந்தது. அதற்கு அமீர் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் முதன் முதலில் எனக்கு விகடன் விருது கிடைத்தது. அதற்கு பின் விஜய் டிவியின் விஜய் விருது, பிறகு ஃபிலிம்பேர் விருது என கிடைத்தன. அதற்குப் பிறகு ஏராளமான விருதுகள் அந்த பாத்திரத்திற்காகக் கிடைத்தன.

அந்த அளவிற்குப் பருத்தி வீரன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் அறிமுகம் செய்த கமல் சார் அவர்களையும் பெரிய அடையாளம் கொடுத்த அமீர் சார் அவர்களையும் நான் என்றும் மறக்க மாட்டேன்.

அதற்குப் பிறகு நிறைய படங்களில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்தேன். அண்மையில் வெளிவந்த ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ வருவதற்குள் 90 படங்களைக் கடந்து விட்டேன்.

நான் ஒரு படத்தில் நடிக்கும் போது வாய்ப்பு தருபவர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள் .நான் என் கதாபாத்திரத்தை ஈடுபாட்டோடு செய்து விடுவேன்.
ஒரே இயக்குநரின் படங்கள் தொடர்ந்து நடிப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அப்படி இயக்குநர்கள் சிறுத்தை சிவா, பாண்டிராஜ், விஜய் மில்டன், சசிகுமார்,கரு பழனியப்பன், நந்தா பெரியசாமி என்று எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறார்கள். எனது திரையுலக வளர்ச்சியில் சமுத்திரக்கனி அவர்களின் பங்கும் இருக்கிறது என்பேன். அந்த அளவுக்கு அவர் ஊக்கப்படுத்துவார். உதயநிதி அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ், சூர்யா அவர்களின் 2டி நிறுவனங்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகின்றன.

பெரும்பாலும் அனைத்து கதாநாயகர்களில் படங்களிலும் நடித்து விட்டாலும் நான் இன்னும் ரஜினி, தனுஷ் என்ற இருவரின் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. எனக்குக் குணச்சித்திரம் மட்டுமல்ல நகைச்சுவை நடிப்பும் நன்றாக வரும். என்னை சிறுத்தை சிவா தான் ‘விஸ்வாசம் ‘ படத்தில் ஸ்டெப் போட்டு நடனமாட வைத்தார்.

இந்த விருது பெறும்போது நான் கடந்து வந்த பாதையைச் சற்றே நினைத்துக் கொண்டேன். ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘செம’ படத்தில் நடித்திருப்பேன்.

‘சாதாரணமாக காமெடியாக தோன்றும் இவர் நடிப்பு என்று வந்துவிட்டால் சீரியஸாக மாறிவிடுவார். அர்ப்பணிப்புள்ள ஆர்ட்டிஸ்ட்’ என்று அவர் என்னைப் பற்றிக் கூறியதை மறக்கமுடியாது.

அந்த விழாவில் எனக்கு மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்தார்கள். கோலி சோடாவில் ஆச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ இப்படி ஒரு பட்டத்தை எனக்குக் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். ஆச்சி மனோரமா அவர்கள் ஒரு பெரிய லெஜெண்ட். அவர் நடிப்பில் ஆயிரம் படங்களைக் கடந்தவர்.

அவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் அந்தப் பாத்திரமாக மாறி விடுபவர். அவர் நடிக்காத பாத்திரங்கள் இல்லை என்கிற அளவிற்கு நடித்தவர். அவர் நடித்த பாத்திரங்கள் எல்லாம் ஒரு பாடமாக இருக்கும். அவரது ரசிகையான எனக்கு இப்படி மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.என்னைப் படங்களில் பார்க்கும் ரசிகர்கள் என்னைத் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணியாகத்தான் பார்க்கிறார்கள்.இதை அவர்கள் என்னிடம் பேசும்போது என்னால் அறிய முடிகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. காலம் ஓடுகிறது. ‘விருமாண்டி’ படம் வந்த போது பிறந்த எனது இளைய மகள் சுபிக்ஷா இப்போது கல்லூரி மாணவி .

நான் மதுரையில் வசிக்கிறேன். வாய்ப்புகள் வரும் போது சென்னை வந்தோ வெளியூர் சென்றோ நடித்துக் கொடுத்துவிட்டு வருகிறேன். மற்றபடி நான் என் அன்பான கணவர், என் அழகான பாசமான மகள்கள் என்கிற சின்ன குடும்பம் என்று வாழ்கிறேன். எனக்குக் கோட்டைகள் கட்ட ஆசை இல்லை.சின்ன சின்ன ஆசை கொண்ட எளிய மனுஷியாகவே நான் வாழ்ந்து வருகிறேன்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ‘பருத்திவீரன் சுஜாதா’ என்று பரவலாக அறியப்பட்ட சுஜாதா பாலகிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here