சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘பப்ளிக்.’
கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக் உள்ளிட்டவை முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதேமில்லத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வைத்து வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
அதற்கடுத்து வெளிவந்த ஸ்னீக்பீக்’கின் தொடக்கத்தில் ‘இந்த படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்துமே நிஜம். இங்கு நடந்ததைதான் சொல்லியிருக்கிறோம். யார் மனமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பு கிடையாது’ என தொடங்கி மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் போராட்டங்களை நக்கல் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது.
அதற்கடுத்து வெளியான ‘ஸ்னீக்பீக்’கில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு காட்சி வெளியாகி அரசியல் கட்சிகளில் சீட் கொடுக்கும் முறையை கிண்டல் செய்திருந்தது.மற்றொரு ஸ்னிக்பீக்’கில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் காட்சி வெளியாகியிருந்தது. இது இன்றைய அரசியல் கட்சிக்குள் இருக்கும் தொண்டர்களின் நிலையை காட்டுவது போல் அமைந்திருந்தது.
இப்படி சர்ச்சைக்குரிய போஸ்டர்கள், ஸ்னீக்பீக் மூலம் அரசியலை விமர்சித்து வரும் பப்ளிக் படம் என்ன சொல்ல வருகிறது, எந்த அரசியலை பேச போகிறது என்கிற விவாதத்திற்கு இடையில் தற்போது இந்த படத்தின் ‘உருட்டு உருட்டு’ என்ற முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளது. பாடலின் சில வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை நேரிடையாக தாக்குவது போல் உள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘சுகமா கால நக்கி பொழப்பாய்ங்க‘ என அதிமுகவை நேரடியாக தாக்குவது போல் உள்ள வரிகளும், ‘மகனை சி.எம் ஆக்க துடிப்பாய்ங்க‘ என திமுகவை தாக்குவது போன்ற வரிகளும், ‘மதத்தை முன்ன வச்சு மக்களையும் சிதைச்சு, நாட்டை பங்கு பிரிப்பாய்ங்க‘ என பாஜகவை நேரடியாக விமர்சிக்கும் வரிகள் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.இதேபோல் பாடலின் இறுதியில் மோடி டிவியில் பேசிக் கொண்டிருக்க பெரியார், அண்ணா, காந்தி, சேகுவேரா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அரசியல் தலைவர்களை அவமரியாதை செய்வது போன்று உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த பாடல் குறித்து இணையத்தில் பலரும், பாடல் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்திருப்பதால் படத்தில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்றும், எதாவது ஒரு கட்சியை விமர்சனம் செய்திருந்தால் தப்பிக்கலாம். அனைத்து கட்சியையும் விமர்சனம் செய்துள்ளதால் விரைவில் இந்த பாடல் தடை செய்யப்படலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.