‘படைப்பாளன்’ சினிமா விமர்சனம்

படைப்பாளன்சினிமா விமர்சனம்

திரையுலகில் நடக்கும் படைப்புத் திருட்டை தோலுரிக்கும் ‘படைப்பாளன்.’

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவைச் சுமந்து படிப்படியாக முன்னேறுகிறான் அந்த இளைஞன். ஒரு கட்டத்தில், தன் சிந்தனையில் உருவான கதையை தயாரிப்பாளர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறான். அந்த கதைக் கருவை அப்படியே அபகரித்துக் கொண்ட அந்த தயாரிப்பாளர்  வேறொருவரின் இயக்கத்தில் அந்த கதையை பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடுகிறார். அதை தெரிந்துகொண்ட அந்த இளைஞன் மனதளவில் நொறுங்கிப் போகிறான். கதைக்கான உரிமையைக் கேட்டுப் போராட முடிவெடுக்கிறான்.

பணபலமிக்க அநியாயப் பேர்வழிகளிடமிருந்து சாமானியனுக்கு நீதி கிடைப்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற உண்மையை, தனது போராட்டத்தில் சிலபல சித்திரவதைகளை அனுபவித்தபின் புரிந்துகொண்ட அவன் வேறொரு அவதாரம் எடுத்து தனக்கான நியாயத்தைப் பெறுகிறான்.

அவன் எடுத்த அவதாரம் என்ன என்பது அடுத்தடுத்த காட்சிகள்; அவை அதிர வைக்கும் அத்தியாயங்கள்…

உதவி இயக்குநர்கள் படும் வலிகளை, அவர்கள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறுவதில் இருக்கிற  தடைகளை எடுத்துக் காட்டியிருப்பது விழிகளில் கண்ணீர் எட்டிப் பார்க்கச் செய்யும் எபிசோடுகள்…

கதையின் நாயகன் தன் மனதுக்குள்ளிருக்கும் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லச்சொல்ல அது ‘காஞ்சனா’ ரேஞ்சில் படத்துக்குள் படமாக விரிவது மிரட்டல்! ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த உணர்வு!!

இயக்கம்: தியான் பிரபு

படத்தின் இயக்குநரே கதையின் நாயகனாகவும் நடித்திருப்பதன் பலன் கதாபாத்திரத்தின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தியிருப்பதில் தெரிகிறது. ஈவிரக்கமற்ற தயாரிப்பாளரிடம் சிக்கிச் சின்னாபின்னபாகி ரத்தம் சொட்டச் சொட்ட தன் பெயரை டைட்டிலில் போடச் சொல்லி கெஞ்சுமிடத்தில் தியான் பிரபுவின் நடிப்பு பரிதாபத்தைச் சம்பாதிக்கும் துடிப்பு! வெல்டன்!

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சிறுவர்கள் விக்னேஷும், ரமேஷும் இதில் பதின்பருவத்தை எட்டிய தோற்றத்தில் வருகிறார்கள். குளிர் நடுக்கம், பேய்ப் பயம் என முகத்தில் காட்டும்போது மனதைத் தொடுகிறார்கள்!

படத்தின் கதையை சுருங்கச் சொல்லும் ‘கதைகளில் பெரிய கதை எங்க கதை’ என்ற பாடலை உருக்கும் குரலில் பாடியிருப்பதோடு, கிளுகிளுப்பான படுக்கையறைக் காட்சியில் தோன்றி ‘பாடி’யும் காட்டுகிறார் வேல்முருகன். சற்றே வில்லத்தனம் பூசிய அவரது நடிப்பில் லேசாக எட்டிப் பார்க்கிறார் வினுசக்ரவர்த்தி!

நாயகிகளில் ஒருவராக மஸ்காரா கண்ணழகி அஸ்மிதா. ரோஸ் என்ற பாத்திரத்தில் வருகிற அவரது போஸ் எல்லாம் இளைஞர்களின் கண்களுக்கு கனிவான விருந்து. சீரியஸான கதையோட்டத்திலிருந்து சற்றே இளைப்பாற அவரது இளமை குலுங்கும் பாட்டு செம ஹாட்டு!

மற்றொரு நாயகியான நிலோபரும் கவனம் ஈர்க்கிறார்.

வில்லனாக ‘சதுரங்க வேட்டை’ வளவன், ‘அருவி’ பாலா, இயக்குநர் தருண் கோபி, சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், அரசியல் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, சேரன் ராஜ், மூணாறு ரமேஷ், ராகுல் தாத்தா என ஏனைய பாத்திரங்களின் பங்களிப்பு கச்சிதம்!

நாயகனிடம் மனோபாலா கதை கேட்கிற கலாட்டா களேபரமும் ரசிக்க வைக்கிறது!

பாலமுரளியின் இசை திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பக்கபலம்.

திகில் காட்சிகளில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது எஸ்.பி. அஹமதின் எடிட்டிங் நேர்த்தி.

பெரும்பாலான காட்சிகளில் இருட்டுக்குள் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிற வேல்முருகனின் ஒளிப்பதிவுக்கு ஸ்பெஷல் பாராட்டு!

படைப்பாழத்தில் சிலபல குறைகள் இருந்தாலும், உருவாக்கத்தில் (Making) படைப்பாளன் நிறைவான பங்காளன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here