மோடியின் வருகையை எதிர்ப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என சென்னை கமிஷனர் அறிவிப்பு செய்ததற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஜனநாயக விரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தமிழக மக்களின் எதிர்ப்பு பரவலாக எழுவதும், Go back Modi ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருப்பதும் வழக்கமான ஒன்று . 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் கருப்பு கொடி, கருப்பு பலூன், கருப்பு சட்டை, கருப்பு ரிப்பன் போன்ற நூதன போராட்டங்களை தமிழக மக்கள் நடத்தி வந்தார்கள். இதற்கு தற்போதைய தமிழக ஆளும் கட்சியும் விதிவிலக்கல்ல. கடந்த அதிமுக ஆட்சியின் போது Go back modi பிரச்சாரத்தை திராவிட முன்னேற்ற கழகம் மிகத் தீவிரமாக நடத்தியது.
2014 ஐ தொடர்ந்து 2019லும் தொடர்ந்து பாஜக அரசு மத்தியில் ஆண்டு வரும் நிலையில் வரும் 28ம் தேதி மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். தற்பொழுதும் தமிழகம் மோடியின் வருகையை எதிர்க்க தயாராக உள்ளது. ஆனால், தற்போது மோடியின் வருகையையொட்டி சென்னை கமிஷனர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மோடியின் வருகையையொட்டி சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். கமிஷனரின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோடியை எதிர்ப்பவர்கள் அவரது சித்தாந்தம் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்துத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திமுக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் மட்டும் மோடி புனிதமானவராக கருதப்பட மாட்டார். கமிஷனரின் இந்த அறிவிப்பு ஜனநாயக போராட்டங்களை முடக்குவதாகும். இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கமிஷனரின் சட்டவிரோத அறிவிப்பிற்கு விளக்கம் கேட்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையின் அடிப்படையில் கருத்து தெரிவிப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.