சி நிகில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ரூம் பாய்’
அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகி. இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, சாதனா, இன்ஸ்டா புகழ் கவிதா விஜயன், கற்பகம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ஜெகன் ராயனிடம் படம் பற்றி கேட்டபோது, ”ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவாக்கியிருக்கிறோம்.
ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் பாயாக பணிபுரிகிறார் நாயகன் சஞ்சய். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் ஜேம்ஸ் சக்காரியா என்பவர் நாயகன் மற்றும் அவனது நண்பர்களை காண்ட்ராக்ட் முடிந்தும் மிரட்டி கொத்தடிமைகள் போல் நடத்தி வேலை வாங்கி வருகிறார்.
ஒரு நாள் திடீரென மேனேஜர் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் கண்காணிப்பாளராக பணியாற்றிய இன்பதுரை என்பவர் மாயமாகிறார்.
மேனேஜர் இறந்ததற்கும் கண்காணிப்பாளர் காணாமல் போனதற்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கு என்ன தொடர்பு என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்.
படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.
ஜெகன் ராயன் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.
2002 ஆம் ஆண்டு ‘தாத்தா’ என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார்.




