ரகசிய சினேகிதனே சினிமா விமர்சனம்

‘காமத்தில் முடியாதவரை காதலில் இல்லை கள்ளக் காதல்.’ இந்த கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிற படம். புதுமுகங்களின் நடிப்பிலும் தொழில்நுட்பப் பங்களிப்பிலும் தயாராகியிருக்கிற ‘ரகசிய சினேகிதனே.’

திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிற அந்த பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலமாக, திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிற ஒரு இளைஞனுடன் தொடர்பு உருவாகிறது. அந்த ரகசிய சினேகிதனுடன் வாட்சப்பில் சொந்தக்கதை, சோகக்கதை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள். அவனும் அதேபோல் அவளுடன் வாட்சப்பில் அரட்டையடிக்கிறான்.

இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவனுக்கு தெரியவர, அவளைக் கண்டிக்கிறான்; அவள் தான் செய்வது தவறில்லை என்கிறாள்; அவனுடைய தொடர்பிலிருந்து விலக மறுக்கிறாள். அதனால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு அதிகமாகிறது. இந்த நிலையில் அவள் திடீரென இறந்துபோகிறாள்.

போலீஸுக்கு, அவளை அவளது கணவனோ அல்லது அவளுடன் வாட்சப்பில் தொடர்பு வைத்திருந்த நபரோ கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உருவாக, விசாரணை துவங்குகிறது. யார் கொலையாளி என்பது கிளைமாக்ஸ்…

கதைநாயகி ஸ்வேதா ஸ்ரீம்டன் ஹோம்லி லுக்கில் கவர்ச்சியாக தெரிகிறார். அதற்கு அவரது இளமையும் வளைவு நெளிவுகளில் உள்ள செழுமையும் காரணமாக இருக்கிறது. சதைப்பிடிப்பான இதழ்களிலிருந்து வெளிப்படும் மெல்லிய புன்னகை கிறக்கம் தருகிறது.

மனதுக்கு பிடிக்காத நபரை கல்யாணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துவதில் இருக்கும் மன உளைச்சல், மனதுக்கு இதம்தரும் விதமாகப் பேசும் நபருடன் வாட்சப்பில் அரட்டையடிப்பதில் உற்சாகம், கணவன் கண்டிக்கும்போது தான் செய்வது தவறில்லை என அவனிடம் காட்டும் எதிர்ப்பு, அவளை தவறாகப் பேசும் நபரிடம் உன் மனைவி ஒழுக்கமா என்று கேட்டு வார்த்தைகளால் விளாசும் விதம், ஒரு கட்டத்தில் தான் செய்கிற தவறை உணர்ந்து திருந்துவது என காட்சிக்கு காட்சி அம்மணி தந்திருப்பது நிறைவான நடிப்பு. உடுத்துவதெல்லாம் எளிமையான சேலைகள்தான் என்றாலும் அதன் வண்ணங்களும் வடிவமைப்புகளும் அவரது அழகை பல மடங்கு அதிகரிக்கின்றன.

ஒரு பெண் ஹாய் சொல்லி விட்டாலே போதும், ஆண்களுக்கு றெக்கை முளைத்துவிடும். அவளுடன் அடிக்கடி வாட்சப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றால் கேட்கவா வேண்டும். அப்படியொரு தொடர்பு கிடைத்துவிட, புகுந்து விளையாடுகிறார் கதைநாயகியின் வாட்சப் நண்பராக வருகிற வேல்முருகன். தன்னுடன் அரட்டையடிக்கும் பெண்ணுடன் இனி தொடர்பு கொள்ள முடியாது என தெரியவரும்போது ஏற்படும் பதற்றத்தையும், சம்பந்தப்பட்ட பெண்ணை நேரில் சந்திக்கும்போது அவளது கணவன் வந்துவிட அந்த சூழ்நிலையில் ஏற்படும் படபடப்பையும் கச்சிதமாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

ஸ்வேதாவின் கணவராக குரு பிரகாஷ். காடுபோல் தலைமுடி, முகத்தை மறைக்கும் தாடி மீசை, அழுக்கடைந்த தோற்றம்; குடிப்பழக்கம் வேறு. அவரைப் பார்த்தால், அவரது மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருப்பதில் தவறில்லை என்பது போல் தோன்றுகிறது. திரைக்கதையின் நோக்கமும் அதுதான். அதற்கேற்ப கதாபாத்திரத்தை உருவாக்கி பொருத்தமான நபரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். மனைவிக்கு இருக்கும் தவறான தொடர்பு தெரிந்து ஆத்திரமடைவது, எப்படியாவது அவள் மனதை மாற்றிவிடலாம் என முயற்சிப்பது, முயற்சிகளுக்கு பலனில்லை என்றானபின் குடிக்கு அடிமையாகி உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வது என அவரிடமிருந்து கிடைத்திருக்கும் எளிமையான நடிப்பு காட்சிகளுக்கு பலம்.

குருவுக்கு நண்பராக வருகிற பாக்கியராஜ் குருவின் மனநிலை அறிந்து ஆறுதல் தரும்போது அக்கறையானவராக தெரிகிறார்; பின்னர் ஆபத்தானவராகவும் மாறுகிறார். இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிற பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு உள்ளிட்டோரின் நடிப்பு நேர்த்தி.

அலட்டல், அதிரடி, இரைச்சல் என எதுவுமில்லாமல் கதையோட்டத்துக்கு சுறுசுறுப்பூட்டும் தரும்படி மிதமான அதிர்வில் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் டாக்டர் சுரேஷ். ஷாம்ராஜின் ஒளிப்பதிவு கச்சிதம்.

எந்தளவுக்கு வேண்டுமானாலும் கிளுகிளுப்பாக, ஆபாசமாக எடுத்திருக்கலாம். அப்படியான கதை. அதை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கண்ணியமாக உருவாக்கி படத்தை தனித்துவமான படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் சேகர் கன்னியப்பன்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here