கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ‘உலகை விலை கேள்’ நாவலைத் தழுவி, தொடர்ச்சியாய் நடக்கும் கொலைகளும் செய்வது யார்? ஏன்? என்ற போலீஸ் விசாரணையுமாக ரேஸ் கார்களின் வேகத்தில் சீறிப்பாயும் ‘ரேகை.’
ஒருவருடைய ரேகை இன்னொருவருடைய ரேகையோடு ஒத்துப்போகாது என்கிற நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் ரேகைகள் அனைத்தும் ஒரே விதமாக இருக்க, அது எப்படி சாத்தியம் என்பது கிளைமாக்ஸ்.
கதைநாயகனாக பாலாஜி ஹசன். போலீஸ் அதிகாரிக்கான கம்பீரத்தை முகபாவங்களில் கச்சிதமாக காட்டி, கொலையாளியை கண்டுபிடிப்பதற்கான களப்பணியில் சுறுசுறுப்பை அதிகரித்திருக்கிறார்.
பாலாஜி ஹசனுக்கு ஜோடியாக வருகிற பவித்ரா ஜனனிக்கும் போலீஸ் கதாபாத்திரமே வழங்கப்பட்டிருக்க, நேர்த்தியான நடிப்பால் அதற்கான நியாயத்தை செய்திருக்கிறார்.
தன் கேரக்டருக்கான வில்லத்தனத்தை வீரியம் குறையாமல் செய்திருக்கிறார் திவ்யாவாக வருகிற அஞ்சலி. பிரேதப் பரிசோதனை மருத்துவராக வருகிற வினோதினி வைத்தியநாதன், நிறைவுக் காட்சியின் நெருக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தெனாவட்டிலும் திமிரிலும் எனர்ஜி எக்கச்சக்கம்.
இன்னபிறர் கொடுத்த வேலையை சரிவர செய்திருக்க, கிரைம் திரில்லருக்கு பொருத்தமான பின்னணி இசையை கொடுத்து காட்சிகளின் வேகத்துக்கு உதவி செய்திருக்கிறார் ஆர் எஸ் ராஜ்பிரதாப். தரமான ஒளிப்பதிவால் காட்சிகளை பிரமாண்டமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம் ஹென்றி.
பழகிப்போன மெடிக்கல் கிரைம் சப்ஜெக்ட்தான் என்றாலும்,
ஒவ்வொரு அத்தியாத்திலும் அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, அதிர்ச்சி தரும் சம்பவங்களின் அணிவகுப்பாக திரைக்கதையை நகர்த்தி, எதிர்பாராத திருப்பங்களைக் கோர்த்து, பார்ப்பவர்களின் கவனம் ஒரு நிமிடம்கூட வேறு எதிலும் போகாதபடி சீரிஸை பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் எம் தினகரன்.
ரேகை _ பதிகிறது அழுத்தமாய்!
-சு.கணேஷ்குமார்

