அடுத்தடுத்த திருப்பங்கள், அதிர வைக்கும் சம்பவங்கள் என சுற்றிச் சுழல்கிற ‘ரூம் பாய்.’
அந்த பிரமாண்டமான ஹோட்டலின் மேனேஜர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். யார் செய்தது என தெரிந்து கொள்வதற்கு முன், அந்த ஹோட்டல் உரிமையாளரின் பி ஏ ரேஞ்சிலிருக்கிற ஒரு நபரும் கொலை செய்யப்படுகிறார். இப்படி அடுத்தடுத்து நடக்கும் கொலைகளைச் செய்வது யார், ஏன் என்பது படத்தின் பின்பாதியில் பரபரக்கும் காட்சிகள்… இயக்கம் ஜெகன் ராயன்
ரூம் பாயாக வருகிற அறிமுக நாயகன் நிகிலுக்கு காதல் உணர்வில் மிதக்க, தங்கை மீதான பாசத்தை வெளிப்படுத்த, பழி வாங்கும் துடிப்பை பிரதிபலிக்க என பல வாய்ப்புகள். பெரிதாய் குறை சொல்ல முடியாதபடி வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். அவர் இந்த பட தயாரிப்பாளரின் மகன் என்பதால் ஹீரோவாக நடிப்பது சுலபமாகியிருக்கிறது. நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கதையாழமுள்ள படங்களில் நடிக்க முடியும் என்பதை மனதில் வைத்து அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டால் கவனம் பெறலாம்.
நாயகி ஹர்ஷாவுக்கு வட இந்திய பளபள முகம். காதலில் பரவசம், காதலனை பிரிந்து செல்கிற ஏக்கம் என காட்டியிருக்கும் நடிப்புக்கு பாஸ்மார்க் கொடுக்கலாம்.
ஹோட்டல் அதிபராக வருகிற அருண்ராஜா பாலியல் வன்முறை, அடிதடி, கொலை என்றெல்லாம் ஓரளவு மிரட்டுகிறார்.
யூடியூபர் காத்து கருப்பு கலைக்கு ஹோட்டலை மாப் போட்டு துடைக்கிற வேலை. அதை செய்து கொண்டே காமெடி என்ற பெயரில் வசனம் பேசுகிறார். சிரிப்பு வர மறுக்கிறது.
மும்பை மாடல் நிதி மரோலி பாடலொன்றுக்கு ஆடி கிறங்கடிக்க, இன்னபிற கேரக்டர்களில் இமான் அண்ணாச்சி, இன்ஸ்டா கற்பகம், பிர்லா போஸ், பிரபாகர், பெஹமின், கவிதா விஜயன் உள்ளிட்டோர் வந்து போகிறார்கள்.
பெரும்பாலான காட்சிகள் ஹோட்டலையே வட்டமடித்துக் கொண்டிருக்க, கேமரா கோணங்களை அப்படியும் இப்படியாக அமைத்து பரபரப்புக்கு உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன்.
வேலன் சகாதேவன் இசையில் பட்டர்ஃபிளை கண்ணடிச்சு’, வாழ்வே வாழ்ந்திடத்தானே’ பாடல்கள் உற்சாகம் தர, பின்னணி இசையில் காட்சிகளுக்குத் தேவையான சுறுசுறுப்பிருக்கிறது.
ஹோட்டலில் நடக்கும் அக்கிரம அநியாயங்கள், அந்தரங்கத்தை பதிவு செய்யும் ரகசிய கேமராக்கள், கொலைகள் என எல்லாமே பழகிய விஷயங்களாக இருப்பதால் மனம் சோர்வடைகிறது.
நடக்கும் கொலைகளுக்குக் காரணம் பழிவாங்கும் உணர்வாகவே இருக்கும் என்பதை புரிந்து கொண்டாலும், கொலைகள் ஏன் எதற்கு என்பதை விளக்கும் ஃபிளாஷ்பேக்கில் அணிவகுக்கிற கள்ளக்காதல் சார்ந்த திருப்பங்கள் எதிர்பாராதவை. அதிகப்படியான திருப்பங்கள் சலிப்பு தருபவை.
ரூம் பாய் – சர்வீஸ் சரியில்லை!
-சு.கணேஷ்குமார்


