இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள லாகின் படங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், நடைபெற்றது.
விழாவினில் சசிகலா புரடக்சன்ஸ் சார்பில் சலீம் பேசுகையில், “இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.
’கா’ பட இயக்குநர் நாஞ்சில் பேசுகையில், “இந்தப்படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் படம்” என்றார்.
’கா’ பட இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேசுகையில், “ரொம்பவும் சென்ஸிடிவான ஒரு கதை. இதில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை தான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது. மொத்த படத்தில் 3 பக்கம் தான் வசனம். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய மௌனம் இருக்கும் படம். என் முழு உழைப்பை தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் அம்மா டி. சிவா பேசுகையில், “திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள் மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார் என்றார்கள் கண்டிப்பாக வருகிறேன் என்றேன். இப்போது தான் சின்ன படங்கள் என்று ஒதுக்குகிறார்கள். திட்டமிட்டு செய்தால் சின்னப்படங்கள் பெரிய வெற்றியை பெறும்.சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும். இந்த படங்கள் அனைத்தும் ஜெயிக்க வாழ்த்துகிறேன்” என்றார்.
ட்ராமா இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசுகையில், “தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப்படமும் எடுப்பது மிகவும் கஷ்டம் தான் ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது. இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.