Home விமர்சனம் சல்லியர்கள் சினிமா விமர்சனம்

சல்லியர்கள் சினிமா விமர்சனம்

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை சிங்கள அரசு எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கியது என்பதை, போராடியவர்களை எப்படியெல்லாம் கொன்றழித்தது என்பதை எடுத்துக் காட்டும் திரைப்படங்களின் வரிசையில் உருவான மற்றுமொரு படைப்பு. பத்தோடு பதினொன்றாக இல்லாமல், போராட்டங்களின் பின்னணியில் ‘மக்கள் ராணுவ மருத்துவப் பிரிவு’ என ஒன்று செயல்பட்ட வரலாறை ஆவணமாக்கி தனித்துவம் பெறுகிற ‘சல்லியர்கள்.’

விடுதலைக்கான போரில் துணிச்சலாக ஈடுபடுகிற தமிழர்களை விதவிதமாக கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. அந்த போரில் தாக்கப்பட்டு, குண்டடி பட்டு உயிருக்கு போராடுகிறவர்களுக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றும் நோக்கில் பதுங்கு குழிகளுக்குள் முகாம் அமைத்து இயங்குகிறது கரிகாலன் தலைமையிலான போராட்டக் குழு. அப்படியான மருத்துவ முகாம் ஒன்றை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வகிக்கிறார் நந்தினி என்கிற இளம் மருத்துவர்.

போரில் தாக்கப்பட்டு தன்னிடம் வருகிறவர்களை அவர் எப்படியெல்லாம் காப்பாற்றுகிறார் என்பது காட்சிகளாக விரிய, ஒரு கட்டத்தில் மருத்துவ முகாம்களை முழுமையாக அழிக்க சிங்கள் ராணுவம் திட்டமிடுகிறது.

அந்த திட்டம் எப்படிப்பட்டது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை விவரித்து கடந்தோடும் திரைக்கதையின் நிறைவுக் காட்சி உலகுக்கு மனிதத்தை போதிக்கிறது. இயக்கம் தி கிட்டு

தன்னிடம் உயிருக்குப் போராடியபடி வந்து சேர்கிற உயிர் எதுவானாலும் அதை காப்பாற்ற வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு செயல்படுகிற மருத்துவராக சத்யதேவி. பதுங்கு குழிக்குள் இருந்தபடியே காதுக்கு கேட்கிற சத்தத்தை வைத்து, போரில் தாக்கப்பட்ட போராளி தூக்கி வரப்படுவதை உணர்ந்து சிகிச்சையளிக்கத் தயாராகும்போது கவனத்தை ஈர்ப்பவர், ஏன் அப்படியொரு உயிருக்கு உத்தரவாதமில்லாத பணியை அர்ப்பணிப்போடு செய்கிறார் என்பதை சொல்கிற ‘பிளாஷ்பேக்’கால் மனம் கலங்க வைக்கிறார். எளிமையான நடிப்புக்காக பாராட்டலாம்.

சிங்கள ராணுவத்துக்கு தெரியாமல் தன் வீட்டில் தன் இன மக்களுக்காக இரத்த சேகரிப்பு நிகழ்வு நடத்தி, அதன் விளைவை சந்திக்கும் கருணாஸின் கதாபாத்திரம் கனமானது; அவரது நடிப்பு மனதை விட்டு அகலாத அளவுக்கு உணர்வுபூர்வமானது.

செம்பியன் என்ற பெயரில் சத்யதேவியுடன் இணைந்து சிகிச்சையளிக்கிறவரின் ஈடுபாடு, சிங்கள ராணுவ அதிகாரியாக வருகிற களவாணி திருமுருகனின் ஈவிரக்கமற்ற செயல்பாடு என மற்ற கேரக்டர்களை ஏற்றிருப்போர் தந்திருப்பது கச்சிதமான நடிப்பு. ராட்சச குணம்கொண்ட சிங்கள அதிகாரிகளாக வருகிறவர்கள் அந்தந்த கேரக்டர்களுக்கு பொருத்தமான தேர்வு.

நடக்கும் சம்பவங்கள் ரத்தமும் சதையுமாக உயிரை உலுக்குவதாக இருக்க, அந்த சம்பவங்கள் நடந்தேறுகிற இடங்கள் அழகாக இருப்பது முரண். இரண்டையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு.

கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளில் ‘மலரே மலரே’, ‘கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி’ பாடல்கள் கென் & ஈஸ்வர் இசையில் கதையின் நகர்வில் பலம் சேர்க்கிறது.

இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒரு துளியாகவே இருக்கக்கூடும். அந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்களில் ஒருவர் தங்கள் முன் உயிருக்குப் போராடுகிற நிலையில் ஆயுதங்களின்றி வந்து சேர்ந்தால் அவரையும் காப்பாற்றுவது கடமை என கருதி செயல்பட்டவர்கள் ஈழத் தமிழர்கள் என்கிற வரலாற்றை பதிவு செய்திருப்பதற்காக சல்லியர்கள் படக்குழுவிற்கு நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் அடிக்கலாம்!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்