சாத்தான் தி டார்க் சினிமா விமர்சனம்

படம் பார்த்து முடித்த ஆடியன்ஸ், தன் முன் கருத்து கேட்டு நீட்டப்படும் மீடியா மைக்’கில் ‘மிரட்டி விட்டுட்டாய்ங்க’ என்று சொல்வதை பார்த்திருக்கிறோம். அதே கருத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்லப்போகும் ஹாரர் படம்.

அந்த பெண்மணிக்குள் திடீர் திடீரென ஏதோவொரு அமானுஷ்ய சக்தி புகுந்துகொள்ள, தன் மகள்கள் உட்பட உடனிருக்கும் மனிதர்களிடம் ஒருவித முரட்டுத்தனத்துடன் நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் விரலை தானே வெட்டிக் கொள்கிறார்; தன் பல்லை தானே பிடுங்கிக் கொள்கிறார். எப்போது எப்படி நடந்துகொள்வார் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாமல், அவரைக் கண்டால் எல்லோரும் பயப்படுகிறார்கள்.

அது ஒருபுறமிருக்க, ஊரில் ஒரு சிறுமி மர்மமான முறையில் காணாது போகிறாள்; சிலர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். ஊர் மக்கள் அதற்கெல்லாம் அவர்தான் காரணம் என்கிறார்கள். அவரால் அவரது மகளுக்கு பேராபத்து ஏற்பட்டு, உயிருக்கு போராடும் நிலைமை உருவாகிறது.

அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார், அவரை ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் சக்தி எப்படிப்பட்டது, நடக்கும் கொலைகளுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் படத்தின் பிளாஷ்பேக் எடுத்துச் சொல்கிறது. அவரை விட்டு அந்த சக்தி விலகியதா இல்லையா, உயிர் பிழைக்கப் போராடும் மகளுக்கு என்னவாயிற்று என்பதெல்லாம் படத்தின் மீதிக் கதை…

அந்நியன் படத்தில் ஒரே நேரத்தில் விக்ரம் அந்நியனாகவும் அம்பியாகவும் மாறி மாறி அசத்துவாரே அதேபோல் இந்த விநாடி வெறித்தனம், அடுத்த விநாடி கருணை முகம் என முகபாவங்களில் வெரைட்டி காட்டி கவனம் ஈர்க்கும் மோனா, செய்யும் செயல்களெல்லாம் நடுங்க வைக்கிறது.

அதே நடுக்கத்தை, இறந்துபோன தன் கணவரை உயிருடன் மீட்பதற்காக நாக்கை அறுத்து சாத்தானுக்கு ரத்தம் சிந்தும்போது தருகிறார் சாந்தினி தமிழரசன். படத்தின் பிளாஷ்பேக் முழுக்க அவரது ஆதிக்கம்தான். நடிப்புப் பங்களிப்பு பக்கா.

மோனாவின் மகளாக ஐரா. கதைப்படி அவர்தான் ஹீரோயின். சாத்தான் ஆட்டிப்படைக்கும் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். பள்ளி மாணவியாக வரும் அவர், அவர் காதலிக்கும் சக மாணவனுக்கு அக்கா போல் தெரிகிறார்.

காதலிக்கு ஆபத்து எனும்போது துடித்துப்போகிற தருணங்களில், அவருக்கு என்ன ஆகியிருக்கும் என அலசி அராயப் போய் அமானுஷ்ய சக்தியால் தாக்கப்படும் காட்சியில் கவனம் பெறுகிறது பிரெட்ரிக் ஜானின் நடிப்பு.

காவல்துறை அதிகாரியாக (இந்த படத்தின் தயாரிப்பாளர்) எட்வர்ட் ராஜன் போதுமான கம்பீரம் காட்டியிருக்கிறார். முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தில் பதற்றமும் பரிதவிப்புமாக வந்து போகிறார் பரிச்சயமான நடிகை ஸ்ரீஜாரவி.

கொடூரம், குரூரம், ரத்தம், போஸ்ட் மார்ட்டம் என காட்சிகள் திகில் கிளப்ப தன் பின்னணி இசையால் பய உணர்வை பல மடங்காக்கி படத்தின் ஒன் ஆஃப் த ஹீரோ என்று சொல்கிற அளவுக்கு பங்காற்றியிருக்கிறார் அஸ்வின் கிருஷ்ணா.

திகிலும் திரில்லுமாக பயணிக்கும் காட்சிகளை பதிவு செய்ததில் ஒளிப்பதிவாளர் பாலா ஜி ராமசாமியின் தரமான உழைப்பு தெரிகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்காலம், தலைமுறை தலைமுறையாக தொடரும் சாத்தானின் ஆளுமை, அதனால் நேர்கிற உயிர்ப்பலி என ஹாரர் சப்ஜெக்டுக்கான கதை, திரைக்கதை ரொம்பவே ஸ்ட்ராங்.

ஒருசிலர் தவிர நடித்திருக்கிற எல்லோரும் புதுமுகங்கள், உறுதுணையாக நின்றிருக்கிற மற்ற துறை கலைஞர்களும் புதியவர்கள்… அவர்களை வைத்துக்கொண்டு இப்படியொரு திகில் படத்தைக் கொடுத்து குலை நடுங்க வைத்திருக்கிற அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் கண்டிப்பாய் பாராட்டுக்குரியவர்.

உங்களுக்கு அவி, அமானுஷ்யம், சாத்தான் என சுற்றிச்சுழன்று பயங்காட்டும் படங்கள் பிடிக்குமென்றால், தவறவிடக்கூடாத படங்களில் பட்டியலில் இந்த டார்க் சாத்தானுக்கும் இடம் கொடுக்கலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here