மருத்துவத்துறையில் என்ன மாதிரியான மோசடிகள் நடக்கின்றன, எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை எளிமையாக எடுத்துக் காட்டி விழிப்புணர்வூட்டுகிற படம்.
அப்பா அரசு மருத்துவமனையின் டீன். மகன் தனியார் மருத்துவமனையின் எம் டி. அப்பா மருத்துவப் பணியை 100% நேர்மையாக செய்பவர். மகன் மருத்துவப் பணியை லட்ச லட்சமாக பணம் குவிக்கும் பிஸினஸாக நினைத்துச் செயல்படுபவர்; மருந்துகளில் கலப்படம் உள்ளிட்ட மிகப்பெரிய குற்றங்களிலும் ஈடுபடுபவர்.
அப்படிப்பட்ட மகனை பார்த்துக் கொண்டு அப்பா சந்திரபோஸ் சும்மாவா இருப்பார்? அப்பாவை மகன் விட்டு வைப்பாரா?
இந்த கேள்விகள் மனதில் உருவாகும்போது அப்பா விபத்தில் சிக்க, சந்தேகத்தின் பேரில் மகன் கைதாக காட்சிகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
அப்பாவுக்கு என்னவானது, மகன் செய்த குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பது கிளைமாக்ஸ்… கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம்: டாக்டர் எஸ். ராஜா
அப்பாவாக டாக்டர் எஸ் ராஜா. மருந்து மாத்திரைகளில் குணப்படுத்த முடிகிற வியாதியுள்ளவர்களை மருந்து மாத்திரைகளில் குணப்படுத்த வேண்டும்; அவசியம் என்றால் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்பதையெல்லாம் கடைப்பிடிக்கிறார்; சக மருத்துவர்களை கடைப்பிடிக்கச் சொல்கிறார். டாக்டர்கள் நேரத்துக்கு டியூட்டிக்கு வர வேண்டும்; நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.
மருந்து மாத்திரைகளை, மருத்துவ உபகரணங்களைத் திருடி விற்பவர்களை கண்டுபிடித்து கண்டிக்கிறர். அப்படிப்பட்ட நடவடிக்கைகளால் ஊர் முழுக்க நல்ல பெயர்; மக்களிடம் ஏகப்பட்ட செல்வாக்கு. மனித வடிவில் கடவுள் என்பது போன்ற கேரக்டர். நடித்துப் பழக்கமில்லாதவர். இயல்பான நடந்து கொள்கிறார். கேரக்டரின் மீது மதிப்பு வருகிறது.
ஒன்றிரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, உப்பு போட்டு கொப்பளித்தால் குணமாகிவிடும் என்ற பிரச்சனையைக் கூட பெரிதுபடுத்தி உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்; 60ஆயிரம் செலவாகும் என்று சொல்லி பணம் பறிப்பவராக, மருந்துகளில் கலப்படம் செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய குற்றங்களிலும் ஈடுபடுபவராக குரு விஜய். லட்சணமாக இருக்கிறார். பெர்ஃபாமென்ஸ் நடிப்புக்கு புதியவர், நடிப்புக்காக பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளாதவர் என்பது தெரிகிறது.
டாக்டர் ராஜாவின் மனைவியாக தர்ஷினி ரெட்டி, மற்ற கேரக்டர்களில் மோனிகா ப்ரீத்தி, பிரதீக்ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம் பி டி கே என அனைவரும் புதுமுகங்கள். நடிப்பு இந்த படத்துக்கு இது போதும் என்கிற அளவிலிருக்கிறது.
ஆட்சிக்கு ஆப்பு வந்தாலும் பரவாயில்லை; மருத்துவத் துறையில் நடக்கும் அநியாயங்களுக்கு துணை போக முடியாது என கெத்து காட்டுவதற்கு பயன்பட்டிருக்கிறார் முதலமைச்சராக வருகிற அரசியல்வாதி எச் ராஜா.
டாக்டர் எஸ் ராஜாவின் பின்னணி இசையும் ராம்நாடு வாசுவின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்.
மருத்துவத்தில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை கமர்சியல் அம்சங்கள் கலந்த திரைப்படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் டாக்டர் எஸ் ராஜா. எடுத்த விதம் மேடை நாடகம் போலிருந்தாலும் காண்பித்த விஷயங்களில், முன்வைத்த கருத்துக்களில் இருக்கிற சமூக அக்கறை பாராட்டுக்குரியது!

