‘செங்களம்’ இணையத் தொடர் விமர்சனம்

‘அரசியலில் விசுவாசி என்பவன் ஆபத்தானவன்’ என்ற ஒன்லைனில் கிட்டத்தட்ட 5 1/2 மணி நேரம் வரை விறுவிறுப்பும் பரபரப்பும் குறையாத கதைக்களத்தில் பயணிக்கும் ‘செங்களம்.’

‘விலங்கு’, ‘அயலி’யைத் தொடர்ந்து ஜீ 5 தளத்தின் தரமான முத்திரைப் படைப்பு! மார்ச் 24, 2023-ல் வெளியீடு.

விருதுநகரையொட்டிய காட்டுப் பகுதியில் மூன்று இளைஞர்கள் (கலையரசன், டேனியல் ஆனி போப், லகுபரன்) பதுங்கியிருந்து ஊரில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகர்களை கட்டம் கட்டி திட்டம் தீட்டி கதை முடிக்கிறார்கள். காவல்துறை அவர்களை பிடிக்க முடியாமல் திணறுகிறது.

அவர்கள் யாரையெல்லாம் குறிவைத்து உயிர் பறிக்கிறார்கள், அதற்கான காரணம் என்ன, சட்டத்தின் பிடியில் சிக்காமலிருக்க என்னென்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் பெட்ரோல் கிணற்றில் தீ பற்றியதுபோல் காட்சிகளாக விரிகிறது. இயக்கம் எஸ்.ஆர்.பிரபாகரன்

பதவியைப் பயன்படுத்தி நலத்திட்டங்களை முறையாக நிறைவேற்றி மக்கள் மனதில் ராணியாக இடம்பிடிக்கிற கனமான பாத்திரத்தில் வாணி போஜன். தோழியின் சூழ்ச்சி மூலம் மக்கள் பிரதிநிதியாக வெளிப்படும் தருணத்தில் அவரது முகத்தில் ததும்பும் பெருமிதம், தன்னை முடக்க நினைத்தவர்களைப் பார்த்து உதிர்க்கும் சிரிப்பில் வழியும் அலட்சியம் ஆஸம்; அட்டகாசம்!

தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களை பழிதீர்க்கும் வெறி, அதற்கான திட்டமிடல் என தன் பங்கிற்கு நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார் கலையரசன். அவருக்கு தம்பியாக வருகிறவர்களின் நடிப்பும் நிறைவு!

ஏற்றிருக்கும் எம்.எல்.ஏ. பாத்திரத்திற்கு உரிய கம்பீரம் காட்டியிருக்கிறார் வேல ராமமூர்த்தி!

சக்கர நாற்காலியிலேயே வலம் வந்தாலும் மாவட்ட அரசியலின் மையப்புள்ளியாக சுழலும் சரத் லோகிதஸ்வா வழங்கியிருக்கும் பங்களிப்பு பக்கா!

கணவனை இழந்து தவிக்கும் தனது பள்ளிக்கால தோழிக்கு தோள் கொடுப்பவராக ஷாலி நிவேகாஸ். அவரது அரசியல் அன்டர்பிளே வாவ் சொல்ல வைக்கும் வொன்டர்பிளே!

செழுமையான இளமையும் வளமையான உடல்மொழியும் வாய்க்கப் பெற்றவராக மானஸா ராதாகிருஷ்ணன். படு சீரியஸாக வேகமெடுத்தோடும் கதையில் கூலிங் கிளாஸ், பட்டுப் புடவை என நேட்டிவிட்டிக்கு பொருந்தாத அவரது ரகளையான கெட்டப் ரசிக்க வைக்கிறது; அந்த துடுக்கான நடிப்பு மனம் கவர்கிறது.

இயலாமையை அடக்கியாள்கிற பாத்திரங்களில் பிரேம், பாடகி பூஜா வைத்தியநாதன் இருவரும் தனித்து தெரிகிறார்கள்!

பாசக்கார அம்மாவாக விஜி சந்திரசேகர், வாணி போஜனின் கணவராக பவன், போலீஸ் ஏட்டாக ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, அரசியல்வாதிகளாக வருகிற கஜராஜ், அன்னபாரதி, எம்.எல்.ஏ.வின் பிஏ வாக பக்ஸ், காவல்துறை உயரதிகாரியாக ஜீவாசங்கர்,  கதாநாயகனின் மாமனாராக பத்திரிகையாளர் சு. செந்தில்குமரன் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்… அவர்கள் மட்டுமல்லாது அப்படி வந்து இப்படி போகிற சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட தங்கள் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி உணர்ந்து நடித்திருப்பது பலம்!

வெறித்தனமாக ஓடும் பந்தயக் குதிரைக்கு உற்சாக மருந்து செலுத்தியது போலிருக்கிறது தரண்குமாரின் பின்னணி இசை!

விருதுநகரின் பரந்து விரிந்த சுற்று வட்டாரம், காடு, மலை, அணைக்கட்டு என கழுகுப் பார்வையில் சுற்றி வளைத்திருக்கிற வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பிரமாண்ட முலாம் பூசியிருக்கிறது!

நிகழ்காலம் கடந்தகாலம் என முன்னும் பின்னுமாக தத்தித்தாவும் காட்சிகளை குழப்பமின்றி வெட்டித் தந்திருக்கும் எடிட்டரின் உழைப்பு தனித்துவம்!

கதை, திரைக்கதை, கதை நிகழ்விடங்கள், கதாபாத்திரங்களுக்கு சரியாக பொருந்தக்கூடிய நடிகர் நடிகைகள் தேர்வு, கதாபாத்திரங்களின் ஆளுமைக்கேற்ப சிவஞானம், ராஜமாணிக்கம், சூரியகலா, நாச்சியார் என பார்த்துப் பார்த்து பெயர் சூட்டியிருப்பது, பதவிக்கான போட்டிகளில் யார் யார் எந்தெந்த விதங்களில் காய் நகர்த்துவார்கள் என்கிற தந்திரங்களை தகிடுதத்தங்களை அலசி ஆராய்ந்து காட்சிப்படுத்தியிருப்பது என அத்தனையிலும் கடுமையான உழைப்பைக் கொட்டியிருப்பதற்காக இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரனுக்கு அழுத்தமான பாராட்டு!
படத்தின் சில கதாபாத்திரங்களின் அரசியல் கள நகர்வுகள், சூழ்ச்சிகள் தமிழ்நாட்டின் பிரபல அரசியல் தலைவர்களில் சிலரை நினைவுபடுத்தலாம் சிலரை பிரதியெடுத்தது போலிருக்கலாம். அப்படியான கதாபாத்திரங்களை கையாண்டுள்ள துணிச்சலுக்காக, உண்மையாக நடந்த, நடக்கிற மாநில அரசியலை மாவட்ட அரசியல் களத்திற்கு மாற்றியிருக்கும் சாமர்த்தியத்துக்காக அடுத்த பாராட்டு!

இதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியெழுப்பும் காட்சிகளும் இதெல்லாம் சாத்தியமேயில்லை என நினைக்க வைக்கும் காட்சிகளும் இல்லாமலில்லை. அதெல்லாம் அமர்க்களமான விருந்தின் ஓரத்தில் வைக்கப்படும் ஊறுகாய் போலிருப்பது ஆறுதல்!

செங்களம் – உண்மைக்கு நெருக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here