நடிகர் தாடி பாலாஜி குடல் சார்ந்த பிரச்சனைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு உதவும் விதமாக, சேவை மனப்பான்மை கொண்ட கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி டி செல்வகுமார் ரூ 1 லட்சம் வழங்கினார்.
அதற்கான நிகழ்வில் பேசிய பி டி செல்வகுமார் ”இந்த உதவியை விளம்பரத்துக்காக செய்யவில்லை; தாடி பாலாஜியை அவர் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு தெரியும். அவர் தளபதி விஜய்யுடன் நடிப்பதற்கான வாய்ப்பை ஆரம்பகாலத்தில் பெற்றுக் கொடுத்ததில் இருந்து அவருடன் நட்பு தொடர்கிறது. அவருக்கு இப்போது மருத்துவ சிகிச்சைக்கான உதவி தேவைப்படும் சூழ்நிலை. நான் இந்த நேரத்தில் அவருக்கு உதவுவதன் மூலம் அவரது நிலைமை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். இதை பார்த்து விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் பலரும் அவருக்கு உதவ முன்வர வேண்டும். நான் பாலாஜிக்கு செய்தது உதவியல்ல; ஒரு நல்ல கலைஞனுக்கு என்னால் முடிந்த தொண்டு” என்றார்.
உதவியை பெற்றுக்கொண்ட தாடி பாலாஜி, ”30 வருடங்களுக்கு முன் நான் நடிக்க வந்தபோது விஜய் சார் படத்துல வாய்ப்பு பெற்றுக் கொடுத்தவர் பி டி செல்வகுமார். அவர் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக எவ்வளவோ உதவிகள் செய்து வருகிறார். அவர் அரசுப்பள்ளிகளுக்காக கட்டடம் கட்டிக் கொடுத்தபோது அந்த திறப்புவிழா நிகழ்ச்சிக்கும் நான் போய் வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு பி டி செல்வகுமாருடனான தொடர்பு பற்றி எடுத்துச் சொல்லி நன்றி தெரிவித்தார்.
தாடி பாலாஜியிடம் ‘பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளீர்கள். அவர்களில் யாரும் உதவ முன்வரவில்லையா?’ என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ”நான் இதுவரை யாரிடமும் உதவி கேட்கவில்லை. இப்போ இந்த பிரஸ் மீட் மூலமாகத்தான் பலருக்கும் என் உடல்நிலை பற்றி தெரியும்” என்றார்.
நடிகர் விஜய் மீதும் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் அதீத அபிமானம் கொண்டவர் தாடி பாலாஜி. அவருக்கு த வெ க’வில் இதுவரை பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இது குறித்த கேள்விக்கு, ”நான் விஜய் சாருக்கு நண்பன்கிறதே பதவிதான். அதை தாண்டி, கட்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். சமீபத்துல நான் டிரீட்மென்ட்க்காக அட்மிட்டாகி டிஸார்ஜ் ஆனதும் ரெஸ்ட் எடுக்காம நேரா கரூருக்குத்தான் போனேன். மக்களைச் சந்திச்சு ஆறுதல் சொன்னேன். அப்படி கட்சிக்காக உழைக்கிற நபர்கள் பத்தி அவருக்கு தெரியாம இருக்காது. அதையெல்லாம் வெச்சு வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன். பார்ப்போம்” என்றார்.
பி டி செல்வகுமாரிடம் நடிகர் விஜய்யின் 27 ஆண்டுகால பி ஆர் ஓ என்ற முறையில், அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர் என்ற முறையில் ‘வரும் தேர்தலில் த வெ க’வுடன் கூட்டணி சேர்கிற வாய்ப்பு உண்டா?’ என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பி டி செல்வகுமார், ”விஜய் மாற்று அரசியல் செய்றதுக்காக வர்றேன்னு சொல்றார். ஆனா, அவர் கூட சேர்ற செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனான்னு எல்லோருமே குற்றவாளிகள். அவர்களையெல்லாம் வெச்சிக்கிட்டு என்ன மாற்று அரசியல் எப்படி சாத்தியப்படும்னு சொல்லுங்க. அப்படிப்பட்டவங்களையெல்லாம் கூட்டு சேர்த்துக்கிறவருக்கு எங்களை மாதிரியான உண்மையான மக்கள் நலன்ல அக்கறை கொண்டவங்களை தெரியலை. அவர் கூட இருக்கிறவங்க தெரியவிட மாட்டாங்க” என்றார் காட்டமாக.
தாடி பாலாஜிக்கான பி டி செல்வகுமாரின் மருத்துவ உதவி, சமூக சேவகரும் வழக்கறிஞரும் தி நகர் சோஷியல் கிளப்பின் செயலாளருமான சினோரா பி எஸ் அசோக், அவரது மகள் ஹருணிகிர்த்தி அவரது கணவர் ஹேமச்சந்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
நிகழ்வில், பி டி செல்வகுமார் எழுதிய மாணவர்களுக்கும் வளரத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உந்துதல் தரும் விதத்திலான கருத்துக்கள் அடங்கிய ‘9 மணி பூக்கள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

