திரைப்பட பத்திரிகையாளர்களுடன் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் புத்தாண்டு கொண்டாட்டம்! கேக் வெட்டி உற்சாகம்!

மூத்த பத்திரிகையாளர் கவிதா தலைவர் பொறுப்பிலிருந்து வழிநடத்துகிற ‘தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்‘ (Tamil Movie Journalist Association – TMJA) ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தில் உறுப்பினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதும், அப்போது கேக் வெட்டப்பட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் வழக்கம்!

அந்த வகையில் 2023-ம் ஆண்டின் முதல்நாளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கவிதா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தின் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.நிகழ்வில் அவர் பேசும்போது, ”நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமோடும், வளமோடும், மகிழ்ச்சியோடும் நிறைவாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். புத்தாண்டு தினத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எப்போது அழைத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நான் இயக்குநர் என்பது தெரியாது. நடிகர் விஜய்யின் தந்தை என்றுதான் தெரியும்.

நான் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களுடன் பிரியாணி சாப்பிட்டேன். அந்த தருணம் ஒரு இறைசக்தியை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது.

நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதுதான் பண்டிகை. நாம் மட்டும் புத்தாடைகள் உடுத்தி பண்டிகை கொண்டாடுவதில் சந்தோஷம் கிடையாது. மற்றவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நான் ஒவ்வொரு பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறேன்” என்றார்.நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ‘உங்கள் இளமையின் ரகசியம் என்ன?‘ என்று கேட்க, ”என்னைப் பொறுத்தவரை எனது வயதைக் கூறுவதில் நான் தயக்கம் காட்டியதே கிடையாது. எனக்கு 82 வயது ஆகிவிட்டது என்று சலிப்பாக சொல்வதை தவிர்த்து, ஜஸ்ட் 82 வயதுதான் ஆகிறது என்று சொல்வேன்.

என்னுடைய 36 வது வயதிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஜந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து தியானம் செய்து வருகிறேன். அந்த எனர்ஜி தான் நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம். நீங்களும் செய்து பாருங்கள். உணர்வீர்கள்.

நம்மை இயக்கக் கூடியது கூடியது மூச்சுக்காற்று, அதிகாலை எழுந்து அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து எது பற்றியும் சிந்திக்காமல் அந்த மூச்சுக்காற்று உள்ளே செல்வதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். சந்தோஷம் தானாக வரும். அது இளமையாக இருக்க உதவும்” என்றார்.

தனது பேச்சின் நிறைவில், ”பத்திரிகையாளர்கள் பெரிய நடிகர்களின் படங்களைப் பற்றி எழுதி விளம்பரப் படுத்துவதுபோல், சிறிய பட்ஜெட் படங்கள் பற்றியும் எழுதி ஊக்குவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து, பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸாகவிருக்கிற ‘வாரிசு’, ‘துணிவு’ படங்கள் வெற்றியடைய வாழ்த்தினார்.சங்கத்தின் சார்பில் புதிதாக, எட்டு பேர் கொண்ட ‘நலன் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் பயனாடை போர்த்தி வாழ்த்தினார்!மட்டுமல்லாது நிகழ்வின் நிறைவாக, எஸ்.ஏ. சந்திரசேகர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் 10 கிலோ வீதம் அரிசி வழங்கினார்.நிகழ்வை சங்கத்தின் உறுப்பினரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜ் தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here