தடை அதை உடை சினிமா விமர்சனம்

சமூக வலைதளங்கள், யூ டியூப் போன்றவற்றால் சமூகம் சந்திக்கிற ஆபத்துக்களை எடுத்துக் காட்டும் படம்.

சினிமா இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிற குணாபாபுவும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் இணைந்து, வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவரைச் சந்திக்கிறார்கள். அவரிடம் உண்மைச் சம்பவ பின்னணியில் தாங்கள் எடுத்த குறும்படத்தைக் காண்பிக்கிறார்கள். தயாரிப்பாளர் அதில் திருப்தியடையாமல் வேறு கதை கேட்கிறார். மூவருமாக வேறொரு குறும்படத்தை எடுத்து அவரது பார்வைக்கு கொண்டு போகிறார்கள். அதையடுத்து எதிர்பாராத பிரச்சனையில் சிக்குகிறார்கள்.

அது என்ன மாதிரியான பிரச்சனை, பிரச்சனைக்கு காரணம் என்ன, பிரச்சனையிலிருந்து மீண்டார்களா, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததா என்ற பல கேள்விகளுக்கு பதில் தந்து நகர்கின்றன அடுத்தடுத்த காடசிகள்.

குணாபாபு, திருவாரூர் கணேஷ், மாகாதீர் முகமது மூவரும் தாங்கள் சுமந்திருக்கும் சினிமா கனவை, அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை தங்கள் துடிப்பான நடிப்பில் பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்க, குணாபாபு எடுக்கும் குறும்படத்தில் ஹீரோவாக தாசில்தாராக வருகிற ‘அங்காடித் தெரு’ மகேஷ் கதையின் வலுவான பகுதியை தன் இயல்பான நடிப்பால் தாங்கியிருக்கிறார். இன்னபிற நடிகர்கள் தங்கள் பங்களிப்பில் குறை வைக்கவில்லை.

சாய் சுந்தர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும், தங்கபாண்டியன் _ சோட்டா மணிகண்டன் கூட்டணியின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கின்றன.

இளைஞர்கள் மூன்று பேர் படம் இயக்குவதற்காக தாங்கள் உருவாக்கியிருக்கும் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லச் சொல்ல, அந்த கதை காட்சிகளாக விரியும்படி திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கும் அறிவழகன் முருகேசன் அந்த காட்சிகளின் வழியாக ஏராளமான சமூக அவலங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியிருப்பது, கல்வியின் பெருமையை முன் வைத்திருப்பது, இன்றைய இளைய தலைமுறையின் எதிர்காலம் குறித்த கவலையை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

காட்சிகளில் நாடகத்தனமும் வன்முறையும் அதிகம். அதையெல்லாம் ஒழுங்குபடுத்தி, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘தடை அதை உடை’ ஓடும் தியேட்டர்களில் பெரியளவில் திரண்டிருக்கும் ரசிகர் படை!

-சு.கணேஷ்குமார் 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here