டீசர், டிரெய்லர் வெளியானதிலிருந்து த வெ க தலைவர் விஜய்யை மையப்படுத்தி எடுத்துள்ள படம் என பல தரப்பிலும் பேசப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்து வெளியாகியிருக்கும் படம்.
நடிகர்கள் அரசியல் களத்துக்குள் எப்படி வருகிறார்கள், எப்படி வர வைக்கப்படுகிறார்கள், வந்தபின் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் மிகமிக சுவாரஸ்யமாக எடுத்துக் காட்டியிருக்கும் ‘TN 2026.’
வட மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் குல்கந்த் குமார், திரைப்படத்தில் நடித்து புகழ்பெற விரும்புகிறார். அவரை 1000 கோடிக்கு அதிபதியான பொள்ளாச்சி சிவலிங்கம் ‘நீதான் அடுத்த எம் ஜி ஆர்’ என தூண்டிவிட்டு, அவரை ஹீரோவாக்கி தொடர்ச்சியாக படங்களைத் தயாரிக்கிறார். குல்கந்த் குமார் மாஸ் ஹீரோவாக உயர்ந்தபின், அவரை தலைவராக்கி அரசியல் கட்சி துவங்குகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அவரை ஜெயிக்க வைத்து சி எம் ஆக்குவது அவரது திட்டம். குல்கந்த் குமாருக்கு சி எம் நாற்காலி மீது ஆர்வம் உருவாக பொதுக்கட்டம், பிரஸ் மீட் என பரபரப்புடன் தேர்தலுக்குத் தயாராகிறார்கள்.
குல்கந்த் சி எம் ஆனாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… கதை வசனம் தந்தை தம்பி ராமையா; இயக்கம் மகன் உமாபதி ராமையா
குல்கந்த் குமாராக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்த, இருக்கிற ஒன்றிரண்டு பேரை நினைவுபடுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட கேரக்டரில் நட்டி நட்ராஜ். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் தப்பும் தவறுமாக தமிழ் பேசும்போது தியேட்டர் அதிர்கிற அளவுக்கு எழுகிறது ஆடியன்ஸிடமிருந்து சிரிப்புச் சத்தம். புகழின் உச்சத்துக்கு போகப்போக ‘அமைதிப்படை’ அமாவாசை ரேஞ்சில் காட்டும் கெத்தும் அசத்துகிறது.
திரைப்படங்கள் தயாரித்து குல்கந்த் குமாரை நடிக்க வைத்து முன்னணி ஹீரோவாக்குவது, ஒரு வேளை உணவுக்குக்கூட தட்டுப்பாடான சூழ்நிலையில் தன்னிடம் வந்து சேர்ந்த குல்கந்த் பிரபல நடிகரானதும் தன்னை மரியாதை குறைவாக நடத்தும்போது அதையெல்லாம் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டு, அவரை முதலமைச்சராக்குவதற்கான முயற்சிகளில் இறங்குவது, அதற்காக சொத்துபத்துகளை விற்பது, தான் உருவாக்கிய தலைவனுக்கு விசுவாசியாக இருப்பது கடமை என்கிற லெவலில் களமாடுவது என தம்பி ராமையாவின் பங்களிப்பு கனமாகவும் இருக்கிறது; கலகலப்புக்கும் உதவுகிறது.
ஸ்ரீதாராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த என ஹீரோயின்கள் மூன்று பேரும் ஒவ்வொரு விதமாக கவர், அரசியல்வாதிகளாக எம் எஸ் பாஸ்கர், இளவரசு, தலைவாசல் விஜய், விஜய் சத்யா உள்ளிட்டோர் அப்படியும் இப்படியும் வந்து போகிறார்கள்.
கதையோட்டத்துக்கு பொருந்திப் போகிற பாடல்களுக்கு மீண்டும் மீண்டும் கேட்கும் விதத்தில் இசையமைத்திருக்கிற தர்புகா சிவாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு கச்சிதமான மேட்சிங்.
தியேட்டரில் முதல் வகுப்பு டிக்கெட் 2 ரூபாயாக இருந்த காலகட்டத்தை தன் ஈடுபாடான பங்களிப்பால் நினைவுபடுத்தியிருக்கிறார் கலை இயக்குநர் என் கே ராகுல்.
நடிகர்களின் வளர்ச்சி, அவர்களுக்குள் உருவாகிற நாடாளும் ஆசை, அரசியல் களத்தில் அவர்கள் அடிக்கிற கூத்துகள், செய்கிற சூழ்ச்சிகள் என அன்று முதல் இப்போது சூடுபிடித்திருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தல் கள நிலவரம் வரை அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்திருக்கிறது தம்பி ராமையாவின் கதை, வசனம். நம் கண்முன் நடப்பது கூடுதல் சுவாரஸ்யத்துடன் காட்சிகளாக விரிவதால் தியேட்டரின் ரசிகர்களின் கைத்தட்டல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
T N 2026 – அனைத்து தொகுதிகளும் ஹவுஸ்ஃபுல்!
-சு.கணேஷ்குமார்
