உருட்டு உருட்டு சினிமா விமர்சனம்

சமூக அக்கறையுடன் கதையோட்டத்தை அமைத்து கருத்து சொல்லி நிறைவடைகிற படங்களின் வரிசையில் ‘உருட்டு உருட்டு.’

இளைஞன் சந்துருவை செருப்பால் அடிக்க திட்டமிட்டுக் கிளம்புகிறாள் ஷர்மி. அந்த காட்சியைப் பார்க்க சிலர் ஆர்வத்தோடும் கேமராவோடும்  காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து, அவனிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லி தோளில் சாய்கிறாள். அவனுக்கும் அவள் மீது காதல் தொற்றுகிறது.

அவள், அவனுக்கு தன் தந்தையால் ஆபத்து சூழ்கிற நிலைமை உருவாகும்போது அவனை தன் உறவினர் வீட்டில் பாதுகாப்பாக மறைத்து வைத்து அன்பால் அரவணைக்கிறாள். அப்படியே, எந்த நேரமும் குடித்துக் கொண்டிருக்கிற அவனைத் திருத்த முயற்சிக்கிறாள். காம உணர்வைத் தூண்டிவிட்டு அவனது கவனத்தை தன் பக்கம் திருப்ப திட்டமிடுகிறாள்.

குடி பற்றிய சிந்தனையிலேயே இருக்கும் அவனால் அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் செய்கிற ஒரே வேலை குடிப்பது மட்டுமே என்றாகிவிடுகிறது. அதையெல்லாம் பார்த்துப் பார்த்து பொறுமையிழக்கிற அவள் ஒரு கட்டத்தில் கடுமையான முடிவெடுக்கிறாள். படத்தின் முடிவும் அதுவாகவே இருக்கிறது.

ஷர்மி செருப்பால் அடிக்க நினைக்கும் அளவுக்கு சந்துரு செய்த தவறு என்ன, அவன் குடிகாரன் ஆனது ஏன், அவனுக்கு ஷர்மி கொடுக்கும் தண்டனை என்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்கிறது இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் அமைத்திருக்கிற திரைக்கதை…

எந்தவொரு கவலையுமின்றி மனம்போன போக்கில் சுற்றித் திரிவது, தான் கேட்டு பணம் தராதவனை நூதனமாக பழி வாங்குவது, காதலி எப்படி எப்படியோ அந்த விஷயத்துக்கு தூண்டினாலும் அதை புரிந்துகொள்ளாமல் குடியில் மட்டுமே கவனம் செலுத்துவது என தனக்கான காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார் சந்த்ருவாக வருகிற கஜேஷ் நாகேஷ்.

ஷ்ர்மியாக ரித்விகா ஷ்ரேயா. லட்சணமாக இருக்கும் அவருக்கு காதல் உணர்வை, சலிப்பை, வெறுப்பை, ஆவேசத்தை என உணர்வுகளை சரியான விகிதத்தில் வெளிப்படுத்த தெரிகிறது. குடிக்கு அடிமையானவர்களால் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தன் காதலனுக்கு எடுத்துச் சொல்லி உணர்ச்சி வசப்படும்போது கைத்தட்டல் பெறுகிறார். அந்த காட்சியில் அவர் பேசும் வசனங்கள் நறுக் சுறுக்.

ஊரிலுள்ளவர்களின் சொத்துக்களை அபகரிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது என தனது பங்களிப்பை கெத்தாக செய்ய முயற்சித்திருக்கிறார் ஹீரோயினுக்கு தந்தையாக வருகிற (இந்த படத்தின் தயாரிப்பாளர்) பத்மராஜு ஜெய்சங்கர்.

மூலிகை வைத்தியராக வருகிற மொட்டை ராஜேந்திரன் செய்யும் மருத்துவம் கலகலப்பூட்டுகிறது; மூன்று மனைவிகளுக்கு கணவனான அவர் ‘மனுஷன் வாழ்றான்யா’ என்று பொறாமைப் படுகிற அளவுக்கு பாடல் ஒன்றில் மூன்று பேரையும் போட்டுப் புரட்டி தடவித் தழுவி கிளுகிளுப்பேற்றுகிறார். மூவரில் ஒருவரான மஸ்காரா அஸ்மிதா போடும் ஆட்டத்தில் எனர்ஜி லெவல் எக்கச்சக்கம்.

பல படங்களில் பார்த்ததுபோல இந்த படத்திலும் சேரன் ராஜை போலீஸாக பார்க்க முடிகிறது. மூலிகை வைத்தியரிடம் அவர் சிகிச்சைக்கு வரும்போதும், அதே வைத்தியரை கைது செய்யும்போதும் லேசாக ரசிக்க வைக்கிறார்.

ஹீரோவின் பள்ளிப் பருவ நண்பனாக வருகிறவர் பழி வாங்கும் உணர்ச்சியை பொருத்தமான உடல்மொழியில் வெளிப்படுத்த, திரைப்படம் இயக்கும் ஆர்வத்தில் இருப்பவர் காட்டும் பந்தா கலகலப்பூட்டுகிறது.

பாவா லெஷ்மணன் நன்றாக சிரிப்பூட்டக்கூடியவர். அவரை ஒப்புக்கு சப்பாணியாக ஒரு ஓரமாக உட்கார வைத்திருப்பது அநியாய அக்கிரமம்.

இன்னபிற நடிகர் நடிகைகள் குறையின்றி நடித்திருக்க நேர்த்தியான ஒளிப்பதிவால் காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார் படத்தை இயக்கியிருக்கிற பாஸ்கர் சதாசிவம்.

அருணகிரி தந்திருக்கும் இசையில் ‘கோங்குரா ஏங்குறா’ குத்தாட்டப் பாடலைக் கேட்கும்போது உற்சாகம் வருகிறது; பாடல் காட்சி குதூகலம் தருகிறது. கானா ஸ்டைலில் உருவான ‘டாரா கிழிச்சுப்புட்ட’ பாடலும் அசத்துகிறது.

கதை எங்கோ தொடங்கி, எப்படி எப்படியோ ஓடிக் கொண்டிருப்பது அலுப்பு சலிப்பு தந்தாலும் மதுவுக்கு அடிமையாகும் சமூகம் மீதான அக்கறையோடு சில கருத்துக்களை சிதற விட்டிருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here