ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங் திரைக்கதையில் சொல்லும், கிரைம் டிராமாவாக உருவாகியுள்ள படம் ‘வல்லவன் வகுத்ததடா.’
தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை தயாரித்து, கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் விநாயக் துரை.
படம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் இயக்குநர் விநாயக் துரை பேசியபோது, ”எங்களின் இரண்டு வருட போராட்டம் தான் இந்தப்படம். இது ஹைபர் லிங் கதைக்களம். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருந்த நிலையில், அவர் எனக்கு செக் சைன் பண்ணும்போது பாம்பு வந்தது, அந்த தயாரிப்பாளர் அப்படியே போய் விட்டார். அப்போது என் அப்பா வந்தார். அவரிடம் அப்பா ஃபிரண்டோடு பிஸினஸ் செய்யப்போகிறேன் என சொல்லி அவரிடம் காசு வாங்கித் தான் இந்தப்படம் எடுத்தேன். 3 நாட்கள் முன்பு வரை அவருக்கு இந்த விசயம் தெரியாது. அவர் வேறு யாரோ தயாரிப்பாளர் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார், இப்போது தான் சொன்னேன். அவர் என்னை நம்பவே இல்லை.
தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தான் வல்லவன் வகுத்ததடா படத்தின் மையம். பணம் 5 பேர் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது தான் படம்.
படத்தில் நடித்துள்ள ராஜேஷ் அண்ணா எப்போதும் எனக்குத் துணையாக இருந்துள்ளார். ஹைனா மாதிரியான மேனரிசத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். சுவாதி நடிக்கக் கேட்ட போது அவர் வீட்டில் கூப்பிட்டு இண்டர்வியூ மாதிரி வைத்துத் தான் அனுப்பி வைத்தார்கள். அவரும் நன்றாக நடித்துள்ளார். அருள் ஜோதி அண்ணா எனக்காக மட்டும் நடித்துத் தந்தார். மியூசிக் டைர்க்டர் அட்டகாசமாக மியூசிக் செய்துள்ளார். இப்படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர் எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகை ஸ்வாதி, ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, கேபிள் சங்கர், தயாரிப்பாளர் சி வி குமார் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.