குளிர் பரவிக்கிடக்கும் கொடைக்கானலில் துவக்கம் முதல் இறுதிவரை சூடு குறையாத கதையாக விரிகிற ‘வட்டக்கானல்.’
தான் வசிக்கும் கொடைக்கானலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விளைகிற போதைக் காளான்களை வைத்து பெரியளவில் பிஸினஸ் செய்து வருகிறார் கதிரவன். பிஸினஸ் வெற்றிகரமாக நடப்பதற்காக சிலரை கொலையும் செய்கிறார். அவருடைய மகன்கள், அவருடைய அராஜக அக்கிரமங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.
அந்த மகன்களில் ஒருவர் காதலிக்கும் பெண்ணுக்கு சொந்தமாக ஏக்கர் கணக்கில் இடம் இருக்கிறது. அதில் போதைக் காளான் விளைகிறது. கதிரவன் அந்த பெண்ணிடமிருந்து அந்த இடத்தை வாங்க நினைக்கிறார். அந்த பெண் அவருக்கு இடத்தை விற்பதற்கு தயாராக இல்லை.
அதன் பிறகு கதையின் போக்கு எப்படியிருக்கும் என்பதை நாம் சுலபமாக யூகிக்க முடிகிறது. அதன்படியே நகர்கிறது…
கதிரவனின் மகனான பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ. முகம் மனோவின் ஜெராக்ஸாக அமைந்திருக்க, முகபாவங்களில் அப்பா மீதான பாசத்தை, அதே அப்பாவை எதிரியாக பார்க்கும்போது ஆவேசத்தை, ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோசத்தை, மென்மையான அணுகுமுறையில் காதல் உணர்வை, குற்றவுணர்ச்சியை அளவாக வெளிப்படுத்தி தன் கேரக்டரை கவனிக்க வைக்கிறார்.
கதிரவனாக ஆர் கே சுரேஷ். அடிதடி, வெட்டுக்குத்து, கொலை என பல படங்களில் காட்டிய அதே வில்லத்தனத்தை மீண்டும் ஒருமுறை பரிமாறியிருக்கிறார்.
துருவன் மனோவின் காதலியாக மீனாட்சி கோவிந்தராஜன். வாயால் பேசும் திறன் இழந்தவராக வருகிற அவரது கண்கள் காட்சிகளுக்குப் பொருத்தமாக பேசுகின்றன.
தன் கணவனின் உயிரை பறித்த ஆர் கே சுரேஷை பலிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து பயன்படுத்தும் வித்யா பிரதீப்பின் நடிப்பில் கேரக்டருக்கு போதுமான மிரட்டல் இருக்கிறது.
ஆடுகளம் நரேன், வண்ண வண்ண பூக்கள் வினோதினி, ஆர் கே வரதராஜ், முருகானந்தம், விஜய் டி வி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு என இன்னபிறர் கதையோட்டத்தில் சரியாக பொருந்தியிருக்கிறார்கள்.
மாரிஸ் விஜய் இசையில் மனோ, கானாபாலா என பிரபல பாடகர்களின் குரலில் பாடல்களைக் கேட்க, ரசிக்க முடிகிறது.
எம் ஏ ஆனந்தின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமை நிரம்பி மேகம் சூழ்ந்திருக்கும் பரந்து விரிந்த ஆழகைப் பார்க்கும்போது பரவச உணர்வு எட்டிப் பார்க்கிறது.
திரைக்கதையில் பரபரப்பையும் திருப்பங்களையும் இணைத்துப் பிணைத்திருக்கும் இயக்குநர் பித்தாக் புகழேந்தி,
போதையின் பாதை எத்தனை கொடுமையானது, அந்த பாதையை தேர்ந்தெடுத்தவர்களின் கதி என்னவாகும் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி படத்தை சமூக விழிப்புணர்வுப் படைப்பாக்கியிருக்கிறார்.
-சு.கணேஷ்குமார்


