‘குறள் படித்தவன் கொலையும் செய்வான்’ என்கிறது வள்ளுவனின் ஒன்லைன்.
பரபரப்பான சென்னையில் அரசியல்வாதி, போலீஸ் இன்ஸ்பெக்டர், அட்வகேட் என மூன்று பேர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட, கொலைகாரன் அடுத்து ஒரு பெரும் பணக்காரரின் மகனை காவு வாங்கப் போவதாக காவல்துறைக்கு தகவல் தருகிறான்.
இப்படி, கிரைம் திரில்லருக்கான பழக்கப்பட்ட டெம்ப்ளேட்டில் துவங்கும் படத்தில் எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் கொலைகளைச் செய்வது கதாநாயகன்தான் என்பதை ஆடியன்ஸுக்கு காட்டிவிட்டு,
போலீஸ் அவனை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி.
கதாநாயகன் கொலை செய்கிறான் என்றால் அதில் நியாயம் இருக்கும். வில்லன்களால் அவன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருப்பான்; அல்லது அநியாயத்தைக் கண்டு பொங்கும் பொதுநலவாதியாக இருப்பான். இந்த கதையில் பொங்குகிறவர் சேத்தன் சீனு.
பளபள நிறமும் நேர்த்தியான தாடி மீசையுமாய் இருக்கிற அவரைப் பார்த்தால், அடிதடியைக் கண்டாலே தூரமாய்ப் போய்விடுகிற அளவுக்கான அப்பாவி போலிருக்கிறது. அப்படியிருப்பவர் சமூக விரோதிகளை வேட்டையாடும்போது ஆக்ரோஷத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு அசுரத்தனம் காட்டுகிறார். கோபத்தில் கொதிப்பதோடு நின்று விடாமல் அழுகை, சோகம், சென்டிமென்ட், கருணை, காதல் என விதவிதமான உணர்வுகளை மீட்டருக்குள் அடக்கியிருக்கிறார். ஆழமான கதைகளில் நடித்தால் பியூச்சர் பிரகாசமாவது உறுதி.
தனது காதலன் கொலைகாரன் என்பது தெரிந்து பதறுவதும், பின்னர் அவனது சம்ஹார சம்பவத்தில் பார்ட்னராவதுமாக ஆஷ்னா ஜாவேரி. படபட பேச்சாலும் துறுதுறுவென சுழலும் கண்களாலும் கவனிக்க வைக்கிறார்.
பணக்காரத் திமிரையும் காம வெறியையும் கலந்துகட்டி களமாடியிருக்கிறார் ஷைலேகுமார்.
ஹீரோவின் நண்பனாக சிங்கம் ஜெயவேல், அராஜக அரசியல்வாதியாக ராம்ஸ், காவல்துறை உயரதிகாரியாக மீசை ராஜேந்திரநாத், அயோக்கிய இன்ஸ்பெக்டராக ராஜசிம்மன், நேர்மையற்ற அட்வகேட்டாக கராத்தே ராஜா, கொலைகார ரவுடியாக சாய் தீனா என நன்றாக நடிப்பவர்கள் பலர் நடமாடிக் கொண்டிருக்க மனோபாலாவும் தொற்றிக் கொண்டிருக்கிறார்.
அஸ்வத் இசையில் அந்தோணிதாசன் குரலில் ‘டப்பாங்குத்து ஆட்டம் ஒண்ணா சேர்ந்து போட்டோம்’ ஐட்டம் சாங் வைப் மூடுக்கு கொண்டு போகிறது. பிஜிஎம்’மில் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கும் அதிரடி அளவாக இருக்கிறது.
சுரேஷ்பாலா தனது நேர்த்தியான ஒளிப்பதிவில் கடற்கரையிலிருந்து மதுரவாயல் பகுதியின் சந்து பொந்து வரை சென்னையின் சிலபல பகுதிகளை அழகிய கோணங்களில் சுற்றிக் காட்டுகிறார்.
குற்றவாளிகளுக்கு வள்ளுவனின் குறள்படி தண்டனை தருகிற இந்த படத்தின் கதை, இன்றைக்கு தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் வலியை அதன் தன்மை மாறாமல் உணர்த்துகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வள்ளுவன் – பலநூறு சூரியனின் வெப்பத்துக்கு சமம் எளிய மனிதனின் கோபம்!
-சு.கணேஷ்குமார்
