முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள்; இதில் வெற்றி மாறன் வேறு மாதிரி பயணம் செய்திருக்கிறார்! -விடுதலை 2 பட விழாவில் இசைஞானி இளையராஜா பெருமிதம்

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘விடுதலை 2’ படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை காலம் இந்த கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையில் பயணித்த குழுவினருக்கு மிக்க நன்றி. படத்தில் என்னுடைய அசிஸ்டெண்ட் அனைவரும் கோ-கிரியேட்டர்ஸாக உழைத்திருக்கின்றனர். இதுபோன்ற டீம் கிடைத்தது என் பாக்கியம்.

இதில் ராஜா சார் உள்ளே வந்தது எனக்கு அதிர்ஷ்டம். அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத்து நிமிடம் தாமதமாக அவரைப் பார்க்க சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திருப்பார். அவர் எனக்கு பர்சனலாகவும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயம்.

படத்தில் இயக்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இருந்து பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எட்டு நாள்தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி. சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். படத்தில் மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கால்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால், இப்போது அவருக்கு படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. என்னுடைய குடும்பம், நண்பர்கள், டீம் எல்லோருக்கும் நன்றி” என்றார்.

இசைஞானி இளையராஜா பேசியபோது, “எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. ‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ‘தெனந் தெனமும்’ பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் ‘மனசுல’ பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான்.

ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒளிப்பதிவாளர் என்பதை தெரிந்து கொண்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராட்டினேன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன். நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் எப்போது ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேனு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி, “சூரி மாதிரியான பெரிய ஹீரோ அவரது படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அற்புதமாக நடித்திருக்கிறார். கென் கருணாஸூக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சேத்தன் சாரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியான தேர்வு அவர். அவரைத் தவிர வேறு யாரையும் ரீபிளேஸ் செய்ய முடியாது.

ஜாக்கி சாரின் செட் காலத்தைக் கடந்து எங்களை கூட்டி சென்று அந்த காலத்தில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. பவானி, தமிழ் சார் அனைவருக்கும் வாழ்த்துகள். உணர்வுகளை இசையாக மாற்றுபவர் ராஜா சார். அவரின் இசை மூலம் எனக்கு பேரானந்தம் கொடுத்த ராஜா சாருக்கு நன்றி. அவரது பேச்சும் வாழ்க்கையில் பல புரிதல்களை எனக்குக் கொடுத்தது. இது முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக்கூடிய படம். இந்தப் படம் உருவாக நாங்கள் உறுதுணையாக இருந்தோம். ஒருநாள் கூட அவர் சோர்ந்து போய் நாங்கள் பார்த்ததே கிடையாது. தயாரிப்பாளர் எல்ரெட் சார் இந்தப் படத்தைக் கிரீடமாக சுமந்து கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சூரி, “கடந்த 49 வருடங்களாக நம் எல்லோர் வீட்டு விசேஷத்திலும் ராஜா அய்யாதான் விழா நாயகன். இசை கடவுள், இசை மருத்துவர் என எல்லா வார்த்தைகளுக்கும் அவர் தகுதியானவர். அவர் இசையமைக்கும் படத்தில் நடித்திருப்பது என் பாக்கியம்.

விஜய்சேதுபதி சார், ராஜீவ் மேனன் சார், சேத்தன் சார், பவானி ஸ்ரீ, கென் கருணாஸ் என அனைவருடனும் நடித்திருப்பது மகிழ்ச்சி. கென் கருணாஸ் சூப்பராக ஆக்‌ஷன் செய்திருக்கிறார். தயாரிப்பாளர் எல்ரெட் சாருக்கு நன்றி. ’விடுதலை1’ படம் உங்களுக்குப் பிடித்தது போலவே, ’விடுதலை2’ படமும் உங்களுக்குப் பிடிக்கும். சேது மாமாவும் மஞ்சு மேமும் சேர்ந்து வசனமே பேசாமல் ஒரு காட்சியில் காதலை வெளிப்படுத்தியிருப்பார்கள். சிறப்பான காட்சி அது!

இந்தப் படம் சிறந்த நடிகராக இன்னும் உங்களை உயர்த்தும் என நம்புகிறேன். ‘விடுதலை’க்கு முன் ’விடுதலை’க்கு பின் சூரி என என் வாழ்க்கையை பிரிக்கலாம். வெற்றிமாறன் என்ற யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி வாங்கியிருக்கிறேன். இதுநாள் வரை நான் சினிமாவை பார்த்ததும், சினிமா என்னைப் பார்த்ததும் மாறியிருக்கிறது. என் காமெடியைப் பார்த்து வாழ்த்தியவர்கள் இப்போது நல்ல நடிகனாக என்னைப் பாராட்டுகிறார்கள். ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்களையும் வாழ்த்தினார்கள். இதற்கெல்லாம் காரணம் வெற்றிமாறன் சார்தான். நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. நன்றி” என்றார்.

நிகழ்வில் ஒளிப்பதிவாளர், நடிகர் ராஜீவ் மேனன், நடிகர் சேத்தன், நடிகை பவானி ஸ்ரீ, நடிகர் கென் கருணாஸ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிடோரும் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here