Home பொது உலகமே மெச்சும் படியும் பொறாமைப்படும்படியும் வாழ்கிற உன்னத இசை குடும்பம் தேவா அவர்களுடைய குடும்பம்! -இசையமைப்பாளர்...

உலகமே மெச்சும் படியும் பொறாமைப்படும்படியும் வாழ்கிற உன்னத இசை குடும்பம் தேவா அவர்களுடைய குடும்பம்! -இசையமைப்பாளர் தேவாவுக்கு இயக்குநர் வ கெளதமன் புகழாரம் 

இணை இயக்குநராக உனக்காகப் பிறந்தேன், சிந்துபாத், காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய நான்கு படங்களும் இயக்குநராக கனவே கலையாதே திரைப்படம் எனவும் நான் அதிகப் படங்களில் வேலை பார்த்த இசையமைப்பாளர் அண்ணன் தேவா அவர்கள். கம்போசிங் என்கிற மெட்டமைக்கின்ற பணியில் அவரோடு இருப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். தேவா அவர்களும் அவரது குழுவினரும் சில வாத்தியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அங்குலமங்குலமாக நகர்ந்து அழகாகப் பாடி ஒவ்வொரு மெட்டையும் இயக்குனர், தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் என அனைவரும் சேர்ந்து முடிவெடுக்கும் தருணம் ஒரு உன்னதமான அனுபவம். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மக வந்து நின்னா முன்னாடி என்கிற பாடலாகட்டும் சலோமியா மெட்டாகட்டும் என்னுடைய கனவே கலையாதே திரைப்படத்தில் வரும் பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூ ஒன்று பாடலாகட்டும் மெட்டு அமைக்கும் போதும் பாடல் பதிவின்போதும் அங்கு நடக்கிற கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் சிவசக்தி மூவி மேக்கர்ஸ் குழுவினர் யாராலும் எப்பொழுதும் காலத்தால் மறக்க முடியாதது.
என்னுடைய ஆட்டோ சங்கர் நெடுந்தொடரின் முகப்புப் பாடல் மற்றும் சந்தனக்காடு நெடுந்தொடருக்கு தேவா அண்ணன் அவர்களுடைய தம்பிகள் சகோதரர் சபேஷ் முரளி இருவரும் இணைந்து வேலாயி வேலாயி வெரகொடிக்கும் வேலாயி பாடலுக்கு மிக மிக அந்தமாக  இசையமைத்து கொடுத்தார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு சகோதரர் சபேஷ் அவர்கள் மறைந்த போது அண்ணன் தேவா அவர்களை அங்கு வைத்துதான் இறுதியாக கண்டேன். அவரின் கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொன்ன போது சகோதரத் துக்கம் தாங்காமல் அவர் கை உதறிக் கொண்டேயிருந்தது. என்னிடம் பேசிய பின்பும் அவருடைய உதடுகள் சப்தங்களின்றி ஏதேதோ பேசி அசைந்து கொண்டிருந்தது. திரை உலகமே மெச்சும் படியும் பொறாமைப்படும்படியும் வாழ்ந்த உன்னத இசை குடும்பம் தேவா அவர்களுடைய குடும்பம்.
சபேஷ் அவர்கள் மறைந்த போது அவர்களுடன் பழகிய ஒரு சகோதரனாக அந்த இழப்பினை நெடுநாள் வ வரை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அண்ணன் தேவா அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
சமீப காலமாக தேவா அண்ணனின் நேர்காணல்களும் பாடலும் இசையும் கலந்த தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கெடுத்து அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்களும்  அவரது பாடல்களை போலவே அற்புத அனுபவங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
என்னத்தை சொல்ல…
துளிர்க்க வைத்த காலம்
தான் உருவாக்கிய அனைத்தையும் உதிர்க்கவும் செய்யும் என்கிற இயற்கை கூற்றினை எவரால் தடுக்க இயலும்.
தாங்க முடியவில்லைதான்
ஆனாலும் திரையிசையில் உங்களால் புகழ்பெற்ற கானா  பாடல்களும் மெல்லிசை மற்றும் துள்ளிசை காணங்களும்  காலத்தால் நிலைக்கும். எண்ணற்ற இதயங்களை  அது ஆற்றும் தேற்றும்.
போய் வாருங்கள் அண்ணா…
தாங்க முடியாத துயரத்தோடு
தம்பி
வ.கௌதமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்