சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி மொழிபெயர்த்து வருகிறது.
இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது. கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.
‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ (The Saga of the Cactus Land) என தலைப்பிடப்பட்டுள்ள அந்த மொழிபெயர்ப்பு நூல் வரும் நவம்பர் 9-ம் தேதி புதன்கிழமை துபாய் அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது. உலகத் தொழில் முனைவோர் பலர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.
மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

