‘வரலாறு முக்கியம்’ சினிமா விமர்சனம்

கிளுகிளுப்பு மசாலா சேர்த்த காமெடி படம்!

தன் வீட்டுக்கு பக்கத்தில் குடிவந்த அந்த கேரளத்துக் குடும்பத்தின் பளபளப்பான பெண்ணைப் பார்த்ததும் ஜீவாவின் மனதுக்குள் பறக்கிறது பட்டாம்பூச்சி. அடுத்தடுத்த நாட்களில் அந்த பெண்ணுடைய அம்சமான அக்காவைப் பார்த்ததும் அந்த பட்டாம்பூச்சி தடுமாறி தடம் மாறுகிறது.

அக்காவா, தங்கையா என அலைபாயும் தன் மனதுக்கு கடிவாளம்போட்டு, தங்கையை கழட்டிவிட்டு, அக்காதான் வாழ்க்கைக்கு பக்கா என்ற முடிவுக்கு வருகிறார் ஜீவா. அந்த நேரமாகப் பார்த்து, ‘உனக்கு அக்காவும் கிடையாது, தங்கச்சியும் கிடையாது; ரெண்டு பேருக்கும் துபாய் மாப்பிள்ளை அல்ரெடி ரெடி’ என்ற வெப்பனுடன் வருகிறார் அந்த பெண்களைப் பெத்த அப்பன்!

என்னைக் கவர்ந்த பெண்ணுக்கு எண்ணெய்க்கிணறு தேசத்திலிருந்து மணமகனா? என கொதிப்படையும் ஜீவா, மனதுக்கு பிடித்த மல்கோவாவை மனைவியாக்க மல்லுக்கட்டுகிறார். அந்த முயற்சிகளில் காமெடி கால்பங்கு காமநெடி முக்கால் பங்கு… இயக்கம்: சந்தோஷ் ராஜன்

கனமான பாத்திரத்தைக் கொடுத்தாலும் சரி, ஜாலியாய்த் திரிவதை ஜோலியாக்கினாலும் சரி அதற்கு தன் நடிப்பால் ஜீவன் தருபவர் ஜீவா. அந்த தகுதிக்கு பங்கம் வராதபடி பங்களிப்பைத் தந்திருக்கிறார். அந்த லேடி கெட்டப் அசத்தல்!

இளமை, செழுமை காம்போ பேக்காம காஷ்மீரா, பிரக்யா!

குதிரை மாத்திரை போட்டுக் கொண்டு விரைப்பாய்த் திரிவது, ஹீரோயினை காதலோடு பார்க்கப்போகிற ஹீரோவிடம் காண்டத்தைக் கொடுத்தனுப்பி கலவர களேபரத்துக்கு காரணமாவது என அடல்ட் ஒன்லி ஏரியாவை குத்தகைக்கு எடுத்து குதூகலப்படுத்தியிருக்கிறார் விடிவி கணேஷ்.

கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், ஹீரோயின்களின் அப்பாவாக சித்திக் அவரவர் தங்களுக்கு கொடுத்த வேலையில் காட்டியிருக்கும் திறமை கச்சிதம்!

ஷாராவின் காமெடி டிராக் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யம்!

ஷான் ரஹ்மான் பின்னணி இசை, சக்தி சரவணன் ஒளிப்பதிவு நேர்த்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here