‘வீராபுரம் 220’ சினிமா விமர்சனம்

ஆக்ஷன், ரொமான்ஸ், ஃபிரெண்ட்ஷிப் என கலந்துகட்டிய கமர்ஷியல் காம்போ.

அந்த ஊரில் விபத்துக்களால் மரணங்கள் நடப்பது தொடர்கதையாக இருக்கிறது. அதன் பின்னணியை கதாநாயகனும் அவனது நண்பர்கள் குழுவும் தோண்டித் துருவுகிறார்கள். அந்த பகுதியின் அரசியல் அதிகார செல்வாக்கும் அடியாள் பலமும் கொண்ட மணல் கடத்தல் ஆசாமி ஒருவரால்தான் மரணங்கள் நடக்கின்றன என்பதை கண்டுபிடிக்கிறார்கள். இரு தரப்புக்குமிடையே மோதல் உருவாகிறது. கிளைமாக்ஸ் வழக்கம்போல்… படத்தில் நாயகி என ஒருவர் இருப்பதால் காதல் எபிசோடுகள் எட்டிப் பார்க்கிறது. நண்பர்களின் நட்பில் ஆழமிருப்பதால் மனம் நெகிழவைக்கும் அத்தியாயங்களும் வந்துபோகிறது… இயக்கம்: செந்தில்குமார்

நாயகனாக ‘அங்காடித் தெரு’ மகேஷ். உடல்நிலை சரியில்லாத நண்பனின் உயிர்காக்கத் துடிப்பது, வில்லன்களை சுளுக்கெடுக்கும்போது சுறுசுறுப்பு காட்டுவது என ஏற்ற கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போகிறார். உற்சாகமாக நடிக்க வேண்டிய காட்சிகளில் உறக்கத்திலிருந்து எழுந்தவர் போல் இருப்பது ஏன் என புரியவில்லை.

விழிகளில் மேக்னட் வைத்திருக்கும் நாயகி மேக்னா, சாக்லெட்டை பார்த்த குழந்தையைப் போல் மென்புன்னகை சிந்தி வலம் வருவது அழகு!

நண்பர்களாக வருகிறவர்களும், வில்லன்களும் அவரவர் கதாபாத்திரத்தை முடிந்தவரை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

இரட்டையர்கள் ரித்தேஷ் – ஸ்ரீதர் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை; பின்னணி இசை பரவாயில்லை ரகம்!

திரைக்கதையில் சற்றே விறுவிறுப்பு கூட்டியிருந்தால் வீராபுரம் நாலாபுறமும் ரசிகர்களைக் ஈர்த்திருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here