‘விக்ரம்‘ சினிமா விமர்சனம்
காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கிற, விதவிதமான துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாய்கிற பரபர விறுவிறு ஆக்ஷன் திரில்லர்! மென்மனதுக் காரர்களுக்கு ஒவ்வாத, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வன்முறை வெறியாட்டம்!
காவல்துறை அதிகாரிகள் இருவர் முகமூடியணிந்த சிலரால் கொல்லப்பட்டு, அது வீடியோ எடுக்கப்பட்டு காவல்துறையின் கவனத்துக்கு வருகிறது. கொல்லப்பட்டவர்களில் உளவுத்துறை உயரதிகாரி கமல்ஹாசனின் மகனும் ஒருவர். அப்புறமென்ன, பழி வாங்கும் படலம்தான்…
மகனைக் கொலை செய்தவர்களை வதம் செய்யக் கிளம்பும் கமல் வதவதவென பலரையும் கொன்று குவிக்கிறார். அந்த கொலைகள் தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக அல்ல என்பது கமலின் ஸ்டேட்மென்ட். அப்படியெனில் எதற்காக? முன்பு நடந்த கொலைகளுக்கு என்ன காரணம்? இந்த கேள்விகளுக்கான பதில்கள் திரைக்கதையில்!
அடர் தாடி, அனல் கக்கும் விழிகள் என முரட்டுத் தோற்றத்தில் வரும் உலகநாயகன், கையடக்க துப்பாக்கியிலிருந்து பல்லாண்டு பழமையான பீரங்கிவரை கையாள்வது ரகளை! மகனிடம், பேரனிடம் காட்டும் பாசமாகட்டும், போதையில்லா சமுதாயத்தை உருவாக்கப் போராடுவதாகட்டும் உலகநாயகனின் நடிப்புப் பங்களிப்பு வழக்கம்போல் கம்பீரம்! ‘பத்தல பத்தல’ பாடலில் கமலிடமிருந்து வெளிப்படும் எனர்ஜியிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம்!
நடந்த கொலைகளுக்கான பின்னணியை அலசி ஆராய்POWERராக பகத் பாசில். படத்தின் முதல் பாதிமுழுக்க அந்த முன்வழுக்கைக்காரரின் ராஜ்ஜியம்தான்! தேர்ந்த நடிப்பால் வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
போதைப் பொருள் (கோகைன்) கடத்தல், பதுக்கல், பன்மடங்காக்கல் என சுற்றிச் சுழலும் இருள் ராஜ்ஜியத்தின் எஃகுக் கதவாக விஜய் சேதுபதி. எதிரிகளை போதையேற்றிக் கொண்டு தாக்கும்போது தாறுமாறாய் பெருத்திருக்கும் அவரது உடல் முழுக்க குலுங்குகிறது; நிலம் நடுங்குகிறது. தங்கப் பல் தெரிவதற்காக வாயை ஒருபக்கமாக இழுத்துச் சிரிப்பது வி.சே’வின் விசேஷம்!
விஜய் சேதுபதிக்கு மகேஸ்வரி, மைனா நந்தினி, பிக்பாஸ் ஷிவானி என மூன்று மனைவிகள். ஒன்றிரண்டு காட்சிகளில் வசீகரமாய் புன்னகைப்பது தவிர அவர்களால் கதைக்கு ஆனபயன் என்ன என்பது கேள்விக்குறி! ‘ப்ப்ப்ப்பா’ காயத்ரியின் கதாபாத்திரம் கதையோட்டத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் கனம் சேர்த்திருக்கிறது.
கிளைமாக்ஸில் சில நிமிடங்களே எட்டிப் பார்க்கும் (விக்ரம் 3-வது பாகத்துக்கான லீடாக கருதலாம்) சூர்யா ஒருவரை வெட்டிப் போடும் காட்சி ரணகளம்; அதகளம்!
சந்தான பாரதி, நரேன், செம்பன் வினோத் ஜோஸ், சம்பத்ராம் என திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாய் நடிகர்கள். அவர்களின் பங்களிப்பில் பழுது சொல்ல ஏதுமில்லை. கமலின் மகனாக வருகிற காளிதாஸ் ஜெயராம் தனித்துத் தெரிகிறார்.
டீனா என்ற கதாபாத்திரத்தில் வருகிற, பாட்டி வயதிலிருக்கும் பெண்மணி ஒரு காட்சியில் சூறாவளியாய் சுழன்றடிப்பது எதிர்பாராதது. கமல் நடிப்பில் விஸ்வரூபத்தில் பார்த்தது.
அந்தக் காலத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’, மூன்றாண்டுகள் முன் வந்த ‘கைதி’ படங்களை கதையோட்டத்தில் இணைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்! காட்சிகளின் உருவாக்கம் கிட்டத்தட்ட ஹாலிவுட் தரம்!
சத்தம் கேட்டால் உயிருக்கே ஆபத்து எனும் நிலையில் (பேரக்)குழந்தையை பீரங்கிக் குண்டுகள் சீறிப் பாயும் போர்க்களத்துக்கு தூக்கி வருவதெல்லாம் வலிந்து திணித்த எபிசோடுகள்!
தீ பிடித்தது போல் நகரும் காட்சிகளுக்கு பெட்ரோல் ஊற்றுவது போலிருக்கிறது அனிருத்தின் பின்னணி இசை!
அன்பறிவு வகுத்திருக்கும் சண்டைக் காட்சிகளைத் தொகுத்துப் பார்த்தால் நிச்சயமாய் சுனாமிக்கு சமமாக இருக்கலாம்!
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருளிலேயே மிதந்துகொண்டிருக்க அவற்றுக்கு வெளிச்சமுலாம் பூசியிருக்கின்றன கிரிஷ் கங்காதரனின் கேமரா கண்கள்!
அங்கும் இங்குமாய், அப்படியும் இப்படியுமாய் அலைபாயும் திரைக்கதையில் காட்சிகளை கத்தரித்துக் கோர்த்திருக்கும் பிலோமின் ராஜின் உழைப்பு கச்சிதம்!
நிறைவாக ஒரு வரி… லாஜிக் பார்க்கும் மூளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டுப் பார்த்தால் ‘விக்ரம்’ ஆக்ஷன் படவிரும்பிகளுக்கு ஆங்கிலப் படங்களுக்கு நிகரான மெகா விருந்து. கமல்ஹாசனை மசாலப்பட ஹீரோவாகப் பார்க்க விரும்புபவர்கள் கிரேஸி மோகன் மீண்டும் பிறந்து வர பிரார்த்தனை செய்யலாம்!