‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள வித் லவ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இந்த படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மதன் ”இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார்.
நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது.
ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார்.
ஆனால், ‘முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.
உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.
நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் “என் முதல் நன்றிகள் அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிப்பை தொடரலாமா என்ற பல சந்தேகங்கள் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தையிலேயே என் எல்லா இன்செக்யூரிட்டிகளும் உடைந்துவிட்டது. அன்றே — என்ன நடந்தாலும் இந்தப் படத்தை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் படத்தின் வெற்றியை முழுவதுமாக சூப்பர் ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன்.
இயக்குநர் மதனுக்கு நன்றி , டூரிஸ்ட்ஃபேமிலி பட ஷீட்டிங் போதே என்னை நடிக்கக் கேட்டார், “இந்தப் படத்தை நான் செய்ததற்காக எப்போதும் பெருமைப்படுவேன். டூரிஸ்ட்ஃபேமிலி படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். மகேஷ் அண்ணா ஒரு தயாரிப்பாளர் அல்ல எனக்கு எப்போதும் என் அண்ணன் தான். சௌந்தர்யா மேடம் டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் போதே என்னை ஒரு ஸ்டார் என வாழ்த்தினார் அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஷான் எனக்காக வந்தார் அவருக்கு நன்றி. அனஸ்வரா பெயர் தான் முதலில் வர வேண்டும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்த மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி” என்றார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. #Thalaivar173 ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அந்தப் படம் டெட்லியாக இருக்கும். மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்த படம் 100 சதவீதம் மதனின் படம் தான். மதன் மிக இனிமையானவர், அந்தக் கணத்தில் வாழத் தெரிந்தவர். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்.
நடிகை அனஸ்வரா ராஜன் “என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.
மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6-ம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.


