பிரிட்டிஷ் சகாப்த பின்னணியில் ‘யாத்திசை’ தரணி ராசேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்தார் நடிகர் சசிகுமார்!

நடிகர் சசிகுமார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் இன்னும் தலைப்பிடப்படாத படத்தை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு, வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

படம் குறித்து இயக்குநர் தரணி ராசேந்திரன் பகிந்து கொண்டதாவது, “நடிகர் சசிகுமார் எங்கள் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டது பெருமகிழ்ச்சி. பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த கதையில், அவர் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் சுவாரஸ்யமான விஷயமாக ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும்” என்கிறார்.

நடிகர்கள் தேர்வு குறித்து கேட்டபோது, “சசிகுமார் சார் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு தன் நடிப்பால் கதாபாத்திரத்தையும் படத்தையும் மெருகேற்றியுள்ளார் சசிகுமார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பின்பு அவர் இந்தப் படத்தின் கதையை கேட்டு உடனே ஒத்துக்கொண்டது எங்களுக்கு ஆச்சரியமான விஷயம்” என்றார்.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில், நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திரைத்துறையில் களம் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் ஜே. கமலக்கண்ணனின் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தனது இந்த முதல் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.

சேயோன், பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here