ஆடியன்ஸை திகிலில் உறையவைக்கும் சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் வகைப் படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்.
அறை எண் 418-ல் மர்மமான சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடந்த அந்த பிரபல கல்லூரியின் ஹாஸ்டல், மீண்டும் திறக்கப்படுகிறது. அதில் விவேக் என்ற மாணவன் சேர்கிறான். கொலை முயற்சி வரை அவனைச் சுற்றி விதவிதமான அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது. தனக்கு நடப்பது நிஜமா அல்லது ஹாலுசினேசன் என்று சொல்லப்படுகிற மனப்பிரமையா என்ற குழப்பத்துக்கு ஆளாகி தவிக்கிறான்.
இப்படி ஆரம்பமே பீதி கிளப்ப, பல வருடங்கள் முன் அறை எண் 418-ல் என்னவெல்லாம் நடந்தது என்பதை எடுத்துக்காட்டுகிற ஃபிளாஷ்பேக் காட்சிகள் உயிரை உலுக்குகின்றன.
ஃபிளாஷ்பேக்கிலிருந்து வெளியில் வந்தால், அமானுஷ்ய சம்பவங்கள் மாணவன் விவேக்கை சுற்றி வளைப்பது ஏன் என்பதை விளக்கியபடி நகரும் காட்சிகள் அத்தனையும் மிரட்டல்… இயக்கம் கீர்த்தன் நடகௌடா
குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தன்னைச் சார்ந்தவர்களையே பலி கொடுக்கிற ராட்சசியாக கத்தியும் ரத்தமுமாய் மிரள வைக்கிறார் சைத்தா ஆச்சார். அது ஒருபக்கமிருக்க யக்சகானா நடனக் கலைஞராக, குழந்தையில்லாத ஏக்கத்தில் மனம் நொறுங்கிக் கிடக்கிறவராக இன்னொரு பக்கம் நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார்.
மாணவன் விவேக்காக சூர்யா ராஜ் வீரபத்தினா. அமானுஷ்ய சம்பவங்களில் சிக்கி ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர் பயத்துடன் கழிப்பவராக, ஹாஸ்டலில் நடந்த – நடக்கும் மர்மங்களின் பின்னணியை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிப்பவராக கச்சிதமான நடிப்பு.
பிரீத்தி பகதாலாவுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரம். புதைந்துள்ள மர்மங்களை தோண்டியெடுப்பதற்கு உதவுகிற வேலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் அவதாரம் அட்டகாசம்.
சக மாணவர்களில் ஒருவராக சரண் லக்கராஜு, மனநல மருத்துவராக ரமேஷ் இந்திரா, இன்னபிற முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் சஷாங்க் பாட்டீல், ஸ்ரீ வைஷ்ணவ்…
பின்னணி இசையால் திகிலுணர்வைக் கூட்டுகிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார் வெங்கி ஜிஜி. ரசிகர்களை பயமும் பதட்டமும் கலந்துகட்டிய மூடுக்கு கொண்டு போவதில் தினேஷ் திவாகரனின் ஒளிப்பதிவுக்கு பெரும் பங்கிருக்கிறது.
காமெடி அதுஇதுவென இழுத்துப் போடாமல் திகில் கதையை திகில் கதையாகவே பார்க்கிற வாய்ப்பு. சென்ஸாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட் பெற்றிருக்கிற இந்த படம் ஹாரர் பட விரும்பிகள் தவற விடக்கூடாத படைப்பு.
-சு.கணேஷ்குமார்

