வெகு நாட்களுக்குப் பிறகு, ஒரு படம் வெளியான முதல் நாளில் திரையரங்கிற்குச் சென்று பார்த்த திரைப்படம் ‘மாமன்னன்.’ 

அரங்கு நிறைந்த காட்சி!
தொடக்கக் காட்சியிலிருந்து படம் முடிந்து ஏ ஆர் ரஹ்மான் பாடி முடித்த பிறகும் கூட கலையாமல் அமைதியாக நின்றது மாமன்னனை மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்கான சாட்சி.
தன்னை அடித்ததால் அழுதுகொண்டு நிற்கும் மாணவனிடம்
“ஏன் அழற?”
“ஒருத்தன் அடிச்சிட்டான் மாஸ்டர்”!
“நீ ஏன் திருப்பி அடிக்கல”?
“நீங்க ஏதும் சொல்வீங்க னு தான் மாஸ்டர்!”
“அப்போ இப்ப
உன்னால் அவனை அடிக்க முடியுமா?”
“முடியும் மாஸ்டர்!”
“அப்போ அடி!”
-உடனே இருவரையும் அழைத்து இருவருக்குமான சண்டையில் அடி வாங்கியவன் அடித்துவிட இருவரையும் அழைத்த அதிவீரன்
-“ஒருத்தனால அடிக்க முடியாதுனு நினைச்சு அவனை அடிக்கிறது அயோக்கியத்தனம்!
“இவனை நம்மளால திருப்பி அடிக்கவே முடியாதுன்னு அடி வாங்கிக்கிட்டே இருக்கிறது கோழைத்தனம் “
-இப்படியாக இருவரிடமும் சொல்லிப் புரியவைப்பது தெளிவு.
ஃபகத் வடிவேலுவை நிற்க வைத்து உதயநிதியை உட்காரச் சொல்லும் இடத்தில் தன் அப்பாவை” நீ உக்காரு ப்பா” என்று சொல்கிறார்.
“யாரு சொன்னாலும் உங்கப்பா உக்கார மாட்டாரு, நீ உக்காரு தம்பி! ” என்று ஃபகத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் உதயநிதி உறுதியான குரலில் “நீங்க இதுவரை சொல்லிருக்கீங்களா? உக்காருங்கன்னு..” என்று கர்ஜிக்கும் போதும், “அப்பா…! நீ உக்காரு ப்பா..”!என்று உறுதியாகச் உரத்துச் சொல்லும்போதும் சமநிலையை விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இதயம் சிலிர்க்கும்.
“உங்கப்பாவை நான் நிக்க வைக்கிறது என் அடையாளம், உன்னை உக்காரச் சொன்னது என் அரசியல்”-
என்கிற ஃபகத் குரலில் உள்ள ஏளனத்தைப் புரிந்துகொண்டு தன் தந்தை அத்தனை சொல்லியும் கேட்காமல் “அப்பா! நான் சொல்ற வரைக்கும் நீ எந்திரிக்காத!” என்ற கட்டளையுடன் அவரை உட்கார வைத்துவிட்டு தன்னையும் தந்தையையும் அடிக்க வருபவர்களை அவர்கள் அடிக்க வாய்ப்பே தராமல் பந்தாடுவது ஆகச் சிறந்த காட்சி!
“உனக்கு நான் எந்த விதத்திலும் குறைவில்லை, சமமாக நடத்து!”என்பதைக் கெஞ்சாமல், குரல் தணியாமல், கண்கள் தாழாமல், நியாயம்தானே என்று நிமிர்வாய்க் கேட்பதுதான் அடுத்த நிலைக்கான சமூக மாற்றம்.இனி வரும் இளைஞர்களுக்கான நம்பிக்கை!
நாம்
சக மனிதனை சமமாக உட்காரவைக்கிற மாமன்னனின் பக்கமா?
கைகட்டி நிற்க வைத்துக் கால்மேல் கால் போட்டு ஆணவமாய் அமர்ந்தபடி எதிரில் இருப்பவனைக் கைகட்டி நிற்கவைத்து அதனைக் கண்டு மகிழும் இரத்தினவேலின் பக்கமா?
என்கிற சுயபரிசோதனை நமக்குள் நிகழுமானால் அதுவே இது போன்ற படைப்புகள் உருவாவதற்கான மையப்புள்ளி!
“எங்கே முதலமைச்சரின் முன்னால் கூட தன் அப்பா நின்றுகொண்டுதான் பேசுகிறாரோ”! என்று பதறியடித்து ஓடி அங்கே முதலமைச்சரிடம் சமமாக அமர்ந்து உரையாடும் அப்பாவைக் காணும் நிறைவு இருக்கிறதே! ஆஹா!
சென்ற தலைமுறையைச் போல் குறுக்கிக் கொள்ளாமல் அடுத்த தலைமுறை தனது தந்தையின் சுயமரியாதையை நிலைநிறுத்த எந்தளவு தயாராக இருக்கிறது என்பதற்கான சான்று இது.
“இப்போலாம் யாருங்க இப்படி இருக்கா? யாருங்க சாதி பாக்குறா”- இதேபோன்ற வசனங்களை ஆங்காங்கே சமூகத்தில் கேட்க முடிகிறது.
இந்த நொடியில் கூட பலரின் மனதிலும் “ஆமால்ல, யாரு இப்படியெல்லாம் இருக்கா?” இப்படித் தோன்றுகிறதுதானே.
எனில்
இப்போதும் ஆணவக்கொலைகள் நிகழ்வது எதனால்?
வாடகை வீடு மறுக்கப்படுவது எதனால்?
ஐஐடியில் தற்கொலைகள் நிகழ்வது எதனால்?
எதனால்? எதனால்? என ஓராயிரம் கேள்விகளைக் கேட்கக்கூடிய அளவு சம்பவங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன.
பட்டிக்காடா? பட்டணமா? என்று ஒரு பழைய திரைப்படம். அதில் சிவாஜி நூறு தடவையாவது ” மூக்கையாத் தேவர் பரம்பரை நான்” என்கிற ரீதியாக கெத்தாக வசனம் பேசியிருப்பார்.
அதனை உறுத்தலாக நினைக்காமல் அதே போன்றே ஆயிரக்கணக்கான சாதிப் பெருமை பேசும் திரைப்படங்களையும் அருவெறுத்தலே இன்றி சாதாரணமாகக் கண்டு ரசித்த எல்லோராலும் இப்போதைய “சமமாக நடத்து”! என்கின்ற நியாயமான ஒற்றைக் கருத்தை ஏற்க முடியாமல் எதிர்க்கத் தோன்றினால் என்ன அர்த்தம்?
இன்னும் சாதி சாகாமல் வாழ்கிறது என்பதுதானே!
இது ஒரு கற்பனைக்கதையா?
இல்லவே இல்லை. பலரின் அன்றாட வாழ்க்கை.
தலைமுறைகள் தாண்டினாலும் இன்னும் ரத்னவேல்கள் வாழ்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
ஆயினும்
இதில் முக்கிய விஷயம் யாதெனில்
அதிவீரன் ஒருபோதும்
” என்னை சமமாக நடத்துவாயா ?”என்று
யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.
அவன் அடிமை இல்லை என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறான்.
எந்த எல்லைக்கு நீங்கள் போனாலும் அந்த எல்லைக்கு நானும் வருவேன் என்கிறான்.
என்ன வினை நீங்கள் நிகழ்த்தினாலும் அதற்குச் “சமமான” எதிர்வினை நிகழ்த்தத் தயாராக இருக்கிறேன் என்பதை உறுதிபடச் சொல்கிறான்.
பன்றியை வளர்ப்புப் பிராணியாக இதுவரை எந்தத் திரைப்படமும் காட்டியதில்லை.
அதுவும் ஓர் உயிர்தான். பிடித்த விலங்கு எனும் இடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிற அளவு அதன்மீது நம் அனைவருக்குமான வெறுப்பை உருவாக்கியது யார்?
எல்லா உயிர்களிடத்திலும் வைப்பது போல அதனிடமும் நேசம் வைத்தலே நியாயம் என்பதைக் காட்டியதற்காகவே தனிப் பாராட்டுகள்.
வேட்டை நாய்கள் அதன் அருகே நெருங்கும்போது தடதடவென மனம் அடித்துக்கொண்ட போது
ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை மனம் முழுவதும் ஈரத்தைக் கசியவைத்தது.
தொண்ணூறுகளில் நாம் கண்ட ரஹ்மானைத் திரும்பக் கொண்டுவந்திருக்கிறான்மாமன்னன்!
“நான்தான் பெரிது நீ சிறிது” என்றெண்ணிக்கொண்டு இம்மண்ணில் பிறந்த எல்லா உயிரும் சமம் தான் என்பதை ஏற்க மறுப்பவர்களுக்கும்,
தேவர் மகன்
தேவர் வீட்டுப் பொண்ணு
பெரியகவுண்டர்பொண்ணு
சின்னக் கவுண்டர்
போன்ற சாதிப் பெயருடன் வந்த,
மற்றும் பெயர் வைக்காமலேயே சாதியைத் தூக்கிப் பிடித்து நிறுத்திய திரைப்படங்களுக்கு விசிலடித்துக் கொண்டாடியவர்களுக்கும்,
சாதி பெயரைக் கேட்டதும் உறவின் நிறத்தை மாற்றும் மனித பச்சோந்திகளுக்கும்,
இந்த மா”மன்னனின்” ஆட்சி பிடிக்காது.
காலம் முழுவதும் தன்னைச் சுற்றிலும் சாதிப் பெருமை பேசிப் பீற்றிக்கொண்டு தன்னை உட்கார விடாமல் நிற்க வைத்தே ரசித்திருக்கும் சமூகம் தந்த வேதனையை முழுக்க அறிந்ததால் தான் எதிரில் இருப்பவர்கள் எல்லோரையுமே கட்டாயப்படுத்தியாவது உட்கார வைத்து மாமன்னன் பேசுகிறார்.
சமத்துவம் என்பது இதுதான். தனக்குக் கிடைக்காததைப் பிறருக்கு மானசீகமாகத் தர விழைவது. அதைக் கண்டு மகிழ்வது.
கல்லால் சிறுவர்களை அடித்துக் கொல்லும்போது இது கதைதான் என்றோ இப்போதெல்லாம் நடக்கவில்லை என்றோ உங்கள் உள்மனது சொல்லுமானால் உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று சொல்லிக்கொள்ளுங் கள்”நானும் ஓர் ரத்தினவேல்” என்று.
நிகழ்வுகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் எண்ணங்கள் அப்படியேதான் இருக்கிறது.
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தனது கொள்கையிவிருந்து சிறிதும் விலகாமல் தொடர்ந்து நேர்மையான, நேர்த்தியான, சமூகத்தின் தேவைகளைப் படைப்பது போலவே, இந்தப் படத்திலும் பார்த்துப் பார்த்து சமூக நீதியைப் படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
உதயநிதி, கீர்த்தி சுரேஷ்,வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் நடித்த அத்தனை பேரும் நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாராட்டுக்கள்.
வடிவேலு “அய்யா! கேளுப்பா”!என மகனிடம் குரல் கம்மிக் குழையும் போதெல்லாம் தந்தைப்பாசம் வாஞ்சையுடன் நம் மனதை வருடுகிறது.
நகைச்சுவையோ குணச்சித்திரமோ எந்தப் பாத்திரம் கிடைத்தாலும் அதனை தனது பாணியில் சிறப்புறச் செய்வார் என்பதை வடிவேலு அழகாக நிரூபித்திருக்கிறார்.
ஓட்டு எண்ணிக்கை காட்சியின்போது ஏற்கனவே நிஜவாழ்வில் நாம் கண்ட நாட்கள் கண் முன்னே வந்து போனது. வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் அரசியல் நாடகம் நடத்தினார்கள் என்பதெல்லாம் அச்சு அசலாக நினைவில் வந்து போனது.
நீயும் நானும் சமம்தான் என்றால்
உன் வீட்டில் சாப்பிடலாம்,
சம்பந்தம் செய்ய முடியுமா?
சபாநாயகர் ஆக முடியும், அமைச்சர் ஆகமுடியும்,
ஆனால் முதலமைச்சர் ஆகிவிடமுடியுமா?
குடியரசுத்தலைவர் கூட ஆகமுடியும்,
ஆனால் பிரதமர் ஆகிவிடமுடியுமா?
ஆகமுடியாது என்பதுதான் பதில்.
ஏன் ஆகமுடியாது-
என்பதற்கான பதில் என்ன?
இது போன்ற கேள்விகளை மனதினுள் உற்பத்தி செய்பவன்தான் மாமன்னன்.
சமத்துவம் நாடும் மாமன்னனை, நீதியை நிலைநாட்டும் மாமன்னனை, எளிய உயிருக்கும் நியாயம் நினைக்கும் மாமன்னனைப் படைத்தளித்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மீண்டும்
வாழ்த்துகள்!
சமூக நீதியை, சமத்துவத்தை, விரும்புபவர்களால்
மாமன்னன் நிச்சயமாக தமிழ் சினிமாவின் நிலையான வெற்றியினைப் பெறுவார்!
எல்லாம் மாறும்! எல்லாம் மாறும்!
