Home விமர்சனம் ஃபயர் சினிமா விமர்சனம்

ஃபயர் சினிமா விமர்சனம்

‘சதை’யம்சம் தூக்கலாய், கருத்துப் பாய்ச்சலாய் ஜே எஸ் கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படைப்பு. நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ, பணம் பறிப்பு என சகட்டுமேனிக்கு செய்த சைபர் குற்றங்களைத் தழுவிய ‘ஃபயர்.’

காசி என்கிற இளவயது பிஸியோதெரபிஸ்ட் காணாமல் போக, போலீஸ் தரப்பு அவனுடன் தொடர்பிலிருந்த பெண்களை வளைத்துப் பிடித்து விசாரிக்கிறது. காசி அந்த பெண்கள் சந்தித்துக் கொண்டிருக்கிற ஒருசில பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, அதன் மூலம் அவர்களுடன் நெருங்கிப் பழகி, தன் காமப்பசிக்கு விருந்தாக்கிக் கொண்டது தெரியவருகிறது.

அதையடுத்து, காசி காணாமல் போனதற்கு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காரணமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிற போலீஸ், குற்றவாளி யார் என கண்டுபிடிக்க விசாரணையைத் தீவிரமாக்குகிறது. அந்த நேரமாகப் பார்த்து முதியவர் ஒருவர் ‘காசியை நான் கொலை செய்துவிட்டேன்’ என்ற வாக்குமூலத்துடன் போலீஸில் சரணடைகிறார். அதே நேரத்தில் காசி எங்கிருந்தோ அவனது அப்பாவுடன் போனில் பேசிய தகவல் கிடைக்கிறது.

அதிர்ச்சியும் குழப்பமும் சேர்ந்து தாக்க, போலீஸாருக்கு தலை சுற்றல் உருவாகிறது.

இப்படி படத்தின் முன்பாதி நிறைவுக்கு வர, உண்மையில் நடந்தது என்ன? காசிக்கு என்னவாயிற்று? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக வேகமெடுக்கிறது இடைவேளைக்கு பிறகான காட்சிகள்…

காசியாக பாலாஜி முருகதாஸ். சந்தர்ப்பத்துக்கேற்ப ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி மாறி அவதாரமெடுக்கிற, ‘மனுஷன் வாழ்றான்யா’ என்று பொறாமைப்படும்படியான கதாபாத்திரம். பிசியோதெரபிஸ்டாக வரும் அவர் சிகிச்சை என்கிற பெயரில் பெண்களை தொட்டுதடவி உணர்ச்சியைத் தூண்டும்போது, அவர்களை உரித்துப் போட்டு தன் முறுக்கேறிய உடலால் ஆக்கிரமிக்கும்போது, தேகத்தை ரசித்து சுவைத்துப் பருகும்போது பிட்டு பட ஹீரோ ரேஞ்சுக்கு பெர்மாபென்ஸ் காட்டியிருக்கிறார். அந்த சுகத்தில் மூழ்கிய தருணங்களை வீடியோவாக எடுத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும்போது காட்டும் வில்லத்தனம் செம பொருத்தம்.

காசியின் கனிவான பேச்சில் மயங்கி, செய்த உதவியில் நெகிழ்ந்து, உடலால் உறவாடி, பின்னர் அவனது கேவலமான முகம் தெரிந்து, அழுது புலம்பி கத்திக் கதறி பணத்தையும் நிம்மதியையும் இழந்து தவிக்கிறவர்களின் பட்டியல் சாந்தினி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் என நீளமானது. அவர்கள் தங்கள் உடம்பில் காட்ட முடிந்ததையெல்லாம் வஞ்சனையின்றி காட்டியிருப்பது நீலப்படங்களுக்கு நிகரானது.

படுக்கையில் மட்டுமல்லாது போனஸாக பாடலிலும் தேகத்தின் செழுமையை கிறக்கமான முகபாவங்களோடு காட்டி தியேட்டரை சூடாக்குகிறார் ரக்ஷிதா.

உடலை திறந்து காட்டுவதோடு உணர்வுபூர்வமாக நடிப்பதற்கான காட்சிகளும் திரைக்கதையில் கலந்திருக்க, அதற்கேற்ப குறிப்பிட்டுப் பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள் அந்த அழகான ராட்சசிகள்.

இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ், காசியை கண்டுபிடிப்பதில் புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் காட்டியிருக்கிறார். இன்னபிறரின் நடிப்புப் பங்களிப்பு கச்சிதம்.

ரக்ஷிதா மழையில் நனையும் ‘மெதுமெதுவாய்’ பாடலின் இசையால் மனதை நனைக்கிறார் டி கே. மற்ற பாடல்களை ஒருமுறை ரசித்துக் கடக்கலாம். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

சதீஷ் ஜி.யின் ஒளிப்பதிவு நேர்த்தி.

இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ராவாக எடுத்துக் காண்பித்திருப்பதால் படம் பக்கா அடல்ட் கன்டென்ட்டாகி ‘ஏ’ சர்டிஃபிகேட்டை சம்பாதித்திருக்கிறது.

உண்மைச் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களம் வில்லங்கமாக இருந்தாலும், கிளைமாக்சில் சொல்லப்பட்டிருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தை ‘ஃபயர்’ விட்டுப் பாராட்டலாம்!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்