திரைப்படத் தயாரிப்பாளர் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித் குமார் வழங்க விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிக்கும் புதிய படம் தொடங்கியிருக்கிறது.
தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகனான அக்ஷய் குமார் அறிமுகமாகும் முதல் படம் இது.
இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் கதையை ‘டாணாக்காரன்’ புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.
திறமை மற்றும் கடின உழைப்பு இருப்பவர்களை நிச்சயம் கோலிவுட் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அதேபோல் அக்ஷய்குமாரிடம் இருக்கும் திறமையும் உழைப்பும் பெரியளவிலான வெற்றியை அவருக்கு நிச்சயம் வழங்கும் என நம்பலாம்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்கின்றனர். ஸ்ரீமன் ராகவன் (கலை) மற்றும் வர்ஷினி சங்கர் (ஆடை வடிவமைப்பாளர்). முதற் கட்டப்படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘லியோ’, விக்ரமின் ’மகான்’, விஜய் சேதுபதி-நயன்தாரா-சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைத் தயாரித்தார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித் குமார். இவரது தயாரிப்பில், இந்த வருடம் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ உட்பட சில படங்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.